ஜிப்மர் நுழைவுத்தேர்வினை 1½ லட்சம் பேர் எழுதினார்கள்

புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் 150 இடங்களும், காரைக்காலில் உள்ள அதன் கிளைக்கல்லூரியில் 50 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஆன்லைன் மூலம் நேற்று நடந்தது. இந்த தேர்வினை எழுத ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 751 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதாவது காலையில் ஒரு லட்சத்து 1,321 மாணவ, மாணவிகளும், மாலையில் 96 ஆயிரத்து 424 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுத திட்டமிடப்பட்டது. இதற்காக 130 நகரங்களில் 291 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புதுவையில் 1,925 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வசதியாக 9 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடந்தன. காலையில் நடந்த தேர்வினை 81 ஆயிரத்து 886 பேரும், பிற்பகலில் நடந்த தேர்வினை 72 ஆயிரத்து 605 பேரும் என ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் தேர்வினை எழுதினார்கள்.தேர்வு முடிவுகள் வருகிற 20-ந் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. வகுப்புகள் ஜூலை 4-ந் தேதி தொடங்க உள்ளன.

Comments