டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முறைகேடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதம் அவகாசம் மத்திய குற்றப்பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முறைகேடு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு 2 மாதம் அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் சென்னையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் படித்த 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றும் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் இந்தத் தேர்வில் விடைத்தாள் வெளியாகி முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், இந்த விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி, சம்பந்தப்பட்ட பயிற்சி மையம், இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர் மற்றும் 2 நாளிதழ்களை இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்டிருந்தார். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 பேரது பதவியும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சார்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் எமிலியாஸ், “இந்த முறைகேடு தொடர்பாக மொத்தம் 266 விடைத்தாள்கள் தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தடய அறிவியல் துறையின் 3 பிரிவினர் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு பிரிவினர் மட்டுமே தங்களது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். எஞ்சிய 2 பிரிவினர் அறிக்கை தந்தால் மட்டுமே எங்களால் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியும். அதற்கு 6 மாதம் அவகாசம் தேவை” என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், “மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கை இழுத்தடித்து வருகின்றனர். இதில் பெரிய அளவில் பணம் விளையாடியுள்ளது. ஆனால் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது” என்றார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘‘இந்த முறைகேடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 2 மாதங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

Comments