மழைக்கால கூட்டத்தொடரில் எஸ்சி, எஸ்டி அவசர சட்டம் தாக்கல் செய்ய அரசு முடிவு

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது எஸ்சி, எஸ்டி அவசர சட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கை கடந்த மார்ச் 20-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்த சட்டத்தின் கீழ் அரசு ஊழியர், தனிநபர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது, உரிய விசாரணைக்குப் பிறகு புகாரில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வடமாநிலங்களில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி நடத்தப்பட்ட முழுஅடைப்பின்போது பெரும் கலவரம் வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவை சீராய்வு செய்யக் கோரி மத்திய அரசு சார்பிலும் பல்வேறு மாநிலங்களின் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் எஸ்டி, எஸ்சி சட்டம் முன்பு எப்படி இருந்ததோ அதே அம்சங்களுடன் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் ஜூலையில் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அவசர சட்டத்தை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, “அவசர சட்டத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாத வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

Comments