தேவை ஒரு பசுமை புரட்சி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
தேவை ஒரு பசுமை புரட்சி ஜி.வி.செல்வம், துணைத்தலைவர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர் இயற்கையோடும், ஏனைய உயிர்களோடும் இயைந்து வாழ்ந்த நாம், தொழில் வளர்ச்சி, நகர்மயமாகுதல், நவநாகரிகம், சொகுசான வாழ்வு என்ற பெயர்களில் இயற்கையை விட்டு தற்போது வெகுதூரம் விலகி வந்துவிட்டது கண்கூடு. ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார ஆதாயம் சார்ந்ததாக மட்டும் இல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் வாழ்நிலை காத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். பூமி வெப்பமடைதல், பருவ நிலை மாற்றம், பசுமைக்குடில் விளைவு என்பன குறித்து அதிகம் பேசப்படுகிறது. கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் ஆகியவை சூரியக் கதிர்வீச்சிலிருந்து பூமி எதிரொலிக்கும் வெப்ப ஆற்றலின் ஒரு பகுதியை சேமித்து பூமியைச் சுற்றி ஒரு வெப்ப வளையத்தை உருவாக்குகின்றன. இவற்றைத்தான் பசுமைக்குடில் வாயுக்கள் என்று அழைக்கிறோம். பனி மண்டலமாக இருந்த பூமி வெப்பமடைந்து, மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் தோன்றியதற்கும், வாழ்ந்து வருவதற்கும் வழி வகுத்த இந்த நல்ல பசுமைக்குடில் வாயுக்கள், தொழில் புரட்சி யுகத்தில் அதிகப்படியாக வெளியிடப்பட்டு, காற்று மண்டலத்தை ஆக்கிரமித்து, தீய பசுமைக்குடில் வாயுக்களாகி, பூமியை உயிரினங்கள் வாழத் தகுதியற்ற ஒன்றாக மாற்றி வருகின்றன. கடந்த நூறு ஆண்டுகளில், பூமியின் வெப்பம் ஒரு டிகிரி அளவு கூடுதலாகி உள்ளது. வெப்ப நிலையில் ஐந்து டிகிரி மாற்றம் ஏற்பட்டு பனிப்பிரதேசமாக இருந்த பூமி, பல லட்சம் வருட காலத்தில் வெப்பமண்டலமாக மாறியதற்கும் நூறே ஆண்டுகளில் ஒரு டிகிரி மாற்றம் ஏற்படுவதற்கும் உள்ள ஆபத்தை ஒப்பீட்டளவில் நாம் உணர்ந்து கொள்ளலாம். மேலும், தற்போதைய வெப்பநிலை இதே அளவில் அதிகரித்தால், 2100-ம் ஆண்டு பூமியின் வெப்பநிலை 2.5 டிகிரி கூடுதலானதாக இருக்கும். இது மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். பூமியின் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய, இயற்கையின் வரங்களான மரங்களையும் தாவரங்களையும் நாம் மறந்து விட்டோம். மரங்கள் அழிக்கப்படுவது பாதியாகக் குறைந்தாலே, ஆண்டு தோறும் வெளியிடப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு 12 சதவீதமாகக் குறையும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, நமது காடுகளை அழிவில் இருந்து காப்பாற்றுவது மட்டுமல்லாது, தேவையான மரங்களைக் கொண்டு காடுகளை வளப்படுத்துவதும் நமது முக்கிய கடமையாகும். நகரங்களின் சாலை ஓரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்களை நடுவதால், வெப்பநிலை குறைந்து, சுற்றுச்சூழல் மாசுபாடு 30 சதவீதம் வரை குறையும். அரசாங்கத்தின் சமூகக் காடுகள் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, அதன் பயனை சிறு, பெரு நகரங்களில் வாழும் ஒவ்வொருவரும் பெறும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு சிறு மற்றும் பெரு நகரங்களில், பழத்தோட்டங்கள், காய்கறிகள், மூலிகைத் தாவரங்கள் கொண்ட பல்பயிர் மாதிரித் தோட்டம் உருவாக்கப்பட வேண்டும். நகரத்தில் வாழும் குழந்தைகள், ஒரு பழமரமோ ஒரு காய்கறிச் செடியோ எப்படி இருக்கும், அவை எவ்வாறு பூக்கும், எவ்வாறு காய்க்கும் என்பதனை அறிந்து கொள்ளும் பொது அறிவு களஞ்சியமாகவும் இத்தோட்டங்கள் அமையும். ‘வீட்டுக்கொரு காய்கறித் தோட்டம்’ என்பது ஒரு கொள்கையாக உருவாக்கப்பட வேண்டும். ஒரு சென்ட் இடமிருந்தால் ஒரு வீட்டுக்கு தினந்தோறும் தேவையான காய்கறிகளையும், கீரைகளையும் உற்பத்தி செய்து கொள்வதற்கு செங்குத்து தோட்டம் என்னும் தொழில்நுட்பம் வந்துள்ளது. வெளிநாடுகளில், கால்நடைகளை மேய்ப்பதற்கு என்று புல்வெளிகள் மற்றும் மேய்ச்சல் நிலங்களைப் பராமரிக்கிறார்கள். நம் நாட்டில் கால்நடைகள் பெரும்பாலும் வறண்ட தரிசு நிலங்களில் மேய்க்கப்படுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒரு குறிப்பிட்ட அளவு தரிசு நிலம், கால்நடைகளின் பொது மேய்ச்சல் நிலமாக மாற்றப்பட்டு, அங்கு வறட்சியைத் தாங்கக்கூடிய புல் வகைகள், கால்நடை மேய்ச்சலுக்கு ஏற்ற பயிர்கள் வளர்க்கப்பட வேண்டும். கடந்த 2015-ம் ஆண்டின் பாரீஸ் ஒப்பந்தத்தின்படி, கரிம விவசாயம் (கார்பன் பார்மிங்) என்னும் புதிய விவசாயக் கோட்பாடு வழக்கத்துக்கு வந்துள்ளது. பயிர்க் கழிவுகளை நீக்காமல் அந்தந்த நிலத்தில் மக்க வைத்தால், கரிம வாயுவை மண்ணில் சத்தாக சேகரிக்க முடியும். இதற்கு, இயற்கை வேளாண்மை வழி வகுக்கிறது. பூமி வெப்பமடைவதற்கு அதிக பங்கு வகிக்கும் கரிம வாயுவை நமக்குத் தேவையான வகையில் சேமிப்பது, கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது. இயற்கை விவசாயம் மற்றும் காடு வளர்ப்பு ஆகியவற்றால் மட்டுமே இது சாத்தியம். ரசாயனம் தவிர்த்த இயற்கை விவசாயம், துல்லிய விவசாயம், தோட்டக்கலைப் பயிர் சாகுபடி ஆகியவற்றை உள்ளடக்கி இரண்டாம் பசுமைப் புரட்சிக்கான செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. பல்லுயிர் காத்தல் எனும் அடிப்படையிலான விவசாயம், காடுகளை வளப்படுத்துதல், வீட்டுத்தோட்டம், புல்வெளி மற்றும் மேய்ச்சல் நிலபரப்பு, சமூக மற்றும் நகர்ப்புற காடுகள், மூலிகைப் பயிர் சாகுபடி ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்றாம் பசுமைப் புரட்சிக்கான தேவையும் தற்போது ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் செயல்திட்டங்கள் ஒரு புறம் இருக்க, இந்த பூமியினை மீண்டும் பசுமை பூமியாக மாற்றும் மிகப் பெரிய சமூகப் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

Comments