
விரைவில் விடுமுறை முடிந்து பள்ளி - கல்லூரிகள் செயல்பட உள்ளன. 10-ம் வகுப்பிற்குப் பின்னர், எதிர்கால நலன் கருதி புதிய பாடப்பிரிவை தேர்வு செய்வதாக இருந்தாலும், பள்ளிப் படிப்பிற்குப் பின், கல்லூரி பட்டப்படிப்பிற்கு புதிய பாடப்பிரிவை தேர்வு செய்வதாக இருந்தாலும் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் தேர்வு செய்யப் போகும் படிப்பு உங்கள் வாழ்க்கைப் பாதையை (career) நிர்ணயிக்கப் போவதாகும். கல்வி திருப்திகரமாக அமைந்து, வாழ்க்கைப் பாதையும் சிறப்பாக அமைய இங்கே குறிப்பிடும் 5 விஷயங்களை அவசியம் சிந்திக்க வேண்டும். அவை...
1. காலத்திற்கேற்ப மாற்றம் இருக்கிறதா?
20 ஆண்டுக்கு முன்பு இருந்த வகுப்பறைக்கும், இன்று இருக்கும் வகுப்பறைக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. பேனா, பென்சில் முதல் பெஞ்ச், கரும்பலகை, பாடம் நடத்தும் யுத்தி வரை எல்லாமே மாறி இருக்கின்றன. இன்று பேனாவுக்கு மை அடைக்க தேவையில்லை. எளிதாக எழுதும் வகைவகையான பேனாக்கள் வழக்கத்தில் உள்ளன. பென்சில்கள் பட்டன் பென்சில்களாகிவிட்டன. பாடவகுப்புகள் ஸ்மார்ட் வகுப்புகளாக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளில் படிப்பவர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது நீங்கள் தேர்வு செய்திருக்கும் கல்வியும், அதை போதிக்கும் கல்வி நிறுவனமும் நவீன கட்டமைப்புக்கு மாறியிருக்கிறதா? என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
விளம்பரங்களில் காட்டப்படும் தொழில்நுட்ப வசதிகள், ஆய்வக வசதிகள், அடிப்படை வசதிகள் நேரடியாகவும் சிறப்பாக வழங்கப்படுகிறதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தகவல் தொடர்பும், பாட வகுப்புகளும் நடைபெறும் கல்லூரியில் சேர்வது கல்வியை எளிமையாக்கும். விருப்பத்திற்குரியதாகவும் மாற்றும். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், சக மாணவ குழுக்களுக்கும் தொடர்பு வசதிகள் நன்றாக இருக்க வேண்டும். விடுமுறை, அன்றைய பாட வகுப்புகள், செயல்திட்டங்கள் பற்றிய விவாதங்களும், விவரங்களும் ஒரு பொது ஒழுங்குமுறையுடன் ஒரு குழுவுக்குள் நிகழ வேண்டும். இத்தகைய இணக்கமான சூழலில் படிப்பவர்களால் கல்வியை மன அழுத்தமின்றி படிக்க முடியும். தகவல் பரிமாற்றம் செய்து, சந்தேகம் தீர்த்து விருப்பத்துடன் கல்வி கற்கலாம். வாழ்க்கை டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கும் வேளையில் கல்வியிலும் அதே வளர்ச்சியைக் கொண்ட கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வது எதிர்காலத்தை பிரகாசிக்க வைக்கும்.
2. திறமைமிக்க ஆசிரியர்கள்...
கல்வி நிறுவனம் காலத்திற்கேற்ப மேம்பட்டிருப்பதைப்போல, கல்வி போதிக்கும் ஆசிரியர்களும், நவீன காலத்திற்கு ஏற்றவர்களாக அமைய வேண்டும். தற்கால தொழில்நுட்பங்களை புரிந்து கொண்டு, மாணவர்களுடன் இணக்கமாகச் செல்லும் ஆசிரியரின் வழிகாட்டல் கிடைத்தால், பாடவகுப்புகள் சோர்வை ஏற்படுத்தாது. மனச்சுமையின்றி கல்வி பயில முடியும். எனவே தாங்கள் சேர விரும்பும் கல்லூரியில் அந்த பாடப்பிரிவில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பற்றி அறிந்து கொள்வது நலம். புகழ்பெற்ற மற்றும் இணக்கமான ஆசிரியர்கள் கிடைத்துவிட்டால் உங்கள் கல்வியும், வாழ்க்கைப் பாதையும் பிரகாசிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
3. தெளிவான சிந்தனை
கல்விக்கூடம் மற்றும் ஆசிரியர்கள் சிறப்புடையதாக அமைவதைப்போலவே உங்கள் சிந்தனையும் செம்மையாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் படிப்பு பற்றிய தெளிவு உங்கள் மனதில் பிரகாசமாக இருக்க வேண்டும். இந்த படிப்பு இதைப் பற்றியது, இதில் இத்தனை பிரிவுகள் இருக்கின்றன, அடுத்தகட்டமாக நாம் பட்டமேற்படிப்புக்கு இந்த பிரிவை தேர்வு செய்ய வேண்டும், ஆராய்ச்சிப் படிப்பில் எதைப்பற்றி ஆராய வேண்டும், எந்த துறைக்கு வேலைக்குச் செல்ல வேண்டும், அல்லது எவ்விதமாக வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவு உங்களிடம் இருக்க வேண்டும். இந்தத் தெளிவு இருந்துவிட்டால், கல்வி நிறுவனத்தில் உள்ள சிறுசிறு குறைகள் உள்ளிட்ட இணக்கமற்ற சூழல்களையும் சமாளித்து உங்களால் சாதிக்க முடியும். எனவே ஒருதுறையை தேர்வு செய்யும்போதே, பெற்றோர் கட்டாயத்தின்படி அல்லது மற்றவர்களின் அறிவுறுத்தல்படி தேர்வு செய்யாமல், உங்கள் சொந்த விருப்பத்தின்படி முடிவு செய்து படித்தால் உயர்வு நிச்சயம்.
4. தனிக் கருத்து அவசியம்...
படிப்பை தேர்வு செய்வதில் தெளிவு இருப்பதுபோலவே, உங்கள் கருத்திலும் தனித்துவம் இருக்க வேண்டும். வகுப்பில் ஆசிரியர், நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? என்று கேள்வி கேட்டால் போதும், சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் டாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ். என்றே பதிலளிப்பார்கள். இவை சமூகத்தில் மதிப்பு மிக்க பணிகள் என்பதால் பலரின் லட்சியமும், ஆசையாகவும அவை இருக்கலாம். ஆனால் நீங்களும் யாவரும் அறிந்த இதுபோன்ற பதிலைத்தான் கூற வேண்டும் என்பதில்லை. தைரியமாக நான் அரசியல்வாதியாவேன், தொழில் அதிபர் ஆவேன், சமூகத் தொண்டு செய்வேன் என்று உங்கள் தெளிவான கருத்துகளைச் சொல்லலாம். அதுபோலவே பாடம் சம்பந்தமான கேள்விகளுக்கும் புத்தகத்தில் இருப்பதுபோன்றே பதிலளிக்காமல் உங்கள் புரிதலுக்கு ஏற்ப புதுமையான பதிலைக்கூறி, நீங்கள் தனிப்பட்ட சிந்தனைவாதி என்பதை அனைவர் மனதிலும் பதிய வைக்கலாம். இத்தகைய தெளிவு நீங்கள் தேர்வு செய்யும் துறையில் உங்களை ஒருநாள் சிம்மாசனத்தில் அமர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.
5. சூழலுடன் இணைதல்...
மேற்கண்ட பண்புகள் எல்லாம் இருந்தால் சிறப்பாக இருக்கும்தான். அது உங்களிடம் இருக்கலாம். ஆனால் சமூகத்தில் அப்படி எதிர்பார்க்க முடியாது. புகழ்பெற்ற கல்வி நிறுவனம் என்று பெயரெடுத்த கல்வி நிறுவனத்தில் நீங்கள் விரும்பாத ஒரு குறை இருக்கலாம், எல்லோரும் மதிக்கும் ஆசிரியரிடம் சில பண்புகள் உங்களுக்கு ஒத்துவராமல் இருக்கலாம், குழுவாக இணைந்து ஒரு புராஜெக்ட் (செயல்திட்டம்) செய்யும்போது உங்கள் மாணவர்குழுவில் சிலர் உங்களுடன் உடன்பட்டு செயல்படாமல் இருக்கலாம். உதாசீனம் செய்யலாம். புரிந்து கொள்ளாமல் நடக்கலாம். நீங்கள் சரியாக செயல்பட்டபோதும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். இத்தகைய சமூக ஏற்ற இறக்கங்களில் சூழ்நிலைக்குத் தக்க, நேரத்திற்கு ஏற்ப அவசர அவசியம் கருதி இணக்கமாக செல்லும் பண்பு வாழ்க்கைப் பாதை சிறப்பாக அமைய முக்கியமாகும். இது சுற்றி இருப்பவர்களின் குற்றம் குறைகளை பொறுத்துக் கொண்டு, அவர்களுடன் இணைந்து உங்கள் லட்சியத்தை நிறைவேற்ற பெரிதும் துணைபுரியும். வாழ்க்கையிலும் மிக உயர்ந்த நிலைக்கு வழிநடத்திச் செல்லும்!
படிக்கும் காலத்திலேயே பஞ்ச தந்திரங்களைப் போன்ற இந்த 5 அம்சங்களை மனதில் பதித்து வெற்றி நடைபோட வாழ்த்துக்கள்!
Comments