
வராக்கடன் பிரச்னையால் பொதுத்துறை வங்கிகள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.9 கோடியும், நாள் ஒன்றுக்கு ரூ.217 கோடியும் இழக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. வராக்கடன் விவகாரத்தால் வங்கிகளின் நிதி நிலைமை மிக மோசமாகி வருகிறது. இதில் இருந்து அவற்றை மீட்க மத்திய அரசு மூலதன நிதி அளிக்கிறது. இருப்பினும் கடன்களை போதிய அளவு வசூல் செய்ய முடியாததால், இதில் இருந்து மீள முடியாமல் வங்கிகள் தவிக்கின்றன. இதனால் பல வங்கிகள் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இந்த வகையில் கடந்த 2016 மார்ச் வரையிலான 5 ஆண்டுகளில் வர்த்தக வங்கிகள் மொத்தம் ரூ.2,25,180 கோடியை தள்ளுபடி செய்துள்ளன என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.
2017-18 பட்ஜெட் ரூ.24.4 லட்சம் கோடி, இலவச காஸ் இணைப்பு கொடுக்க ரூ.13,000 கோடி தேவை. வேளாணுக்கான ஆண்டு பட்ஜெட் ரூ.58,000 கோடி. மத்திய அரசு திட்டங்களுக்கு ரூ.7.1 லட்சம் கோடி. இவை அனைத்தும் சேர்த்தால் கூட வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பை விட குறைவுதான். 2017-18 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.79,000 இழப்பு ஏற்பட்டுள்ளது. வராக்கடன்கள் ரூ.8.6 லட்சம் கோடியாக உள்ளது. வங்கி வரலாற்றில் இந்த அளவு மோசமான நிலை ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கு மொத்தம் ரூ.79,071 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தனியார் வங்கிகள் ரூ.42,000 கோடி லாபம் ஈட்டியுள்ளன. பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 2013ம் ஆண்டில் ரூ.1.56 லட்சம் கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.8.57 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
Comments