9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இது 30-ம் தேதி அதிகாலை மியான்மர் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக வடகிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை. மீனவர்கள் 31-ம் தேதி வரை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். அதற்காக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு வழக்கமான தேதியைவிட 3 நாட்கள் முன்னதாக தொடங்கியுள்ளது.

Comments