
ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் , அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு ஹெச்-4 விசா அளிக்கப்படுகிறது. ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ம் ஆண்டு ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி தங்களிடமுள்ள ஹெச்-4 விசாவின் மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை நீக்க தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் ஹெச்-4 விசாவின் மூலம் பணிபுரிந்து வருகிற 70,000 பேருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த சட்ட திருத்தம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், உள்ளூர் பாதுகாப்புத் துறையின் (டிஹெச்எஸ்) அனுமதிக்காக தற்பொழுது அனுப்பப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உள்ளூர் பாதுகாப்புத் துறை அனுமதி அளித்ததும் மேலாண்மை மற்றும் பட்ஜெட் மேற்பார்வை துறைக்கு இது அனுப்பி வைக்கப்படும் எனவும் ட்ரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த சட்டத் திருத்தத்தை செயல்படுத்த முடிவு செய்து இருப்பதாக உள்ளூர் பாதுகாப்புத் துறை, நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments