கர்நாடக தேர்தல் நிறைவு எதிரொலி 19 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் , டீசல் விலை உயர்வு

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 19 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளன. கர்நாடக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த மூன்று வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நிறுவனங்கள் மாற்றம் செய்யாமல் இருந்து வந்தன. தற்பொழுது தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 21 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.63-ல் இருந்து ரூ.74.80-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை ரூ.65.93-ல் இருந்து ரூ.66.14-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை கடந்த 56 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு கண்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை கொல்கத்தாவில் ரூ.77.50 ஆகவும், மும்பையில் ரூ.82.65 ஆகவும், சென்னையில் ரூ.77.61 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசலைப் பொறுத்தவரை விலை உயர்வுக்குப் பின் ஒரு லிட்டர் டீசல் விலை கொல்கத்தாவில் ரூ.68.68 ஆகவும், மும்பையில் ரூ.70.43 ஆகவும் இருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.69.79-க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு டிசம்பரில் குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் சமயத்தில், விலை குறைப்பு நடவடிக்கைகளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டன. குஜராத் தேர்தல் முடிவடைந்ததும் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தின. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் தேர்தல் நேரத்தில் விலையை உயர்த்தக்கூடாது என அரசு கேட்டுக்கொண்டதாக சர்ச்சைகள் எழுந்தன. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Comments