உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு காவிரி செயல்திட்ட வரைவு அறிக்கை தாக்கல் 10 பேர் கொண்ட குழுவை நியமிக்க மத்திய அரசு முடிவு

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
காவிரி விவகாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் காவிரி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப் போது மத்திய நீர்வளத்துறை துறையின் செயலாளர் யு.பி.சிங் நீதிமன்றத்தில் ஆஜராகி, “மத்திய அரசு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தயாராக இருக்கிறது” என தெரிவித்தார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை நிறைவேற்ற 14 பக்கங்கள் கொண்ட செயல் திட்ட வரைவு அறிக்கையை சீல் இடப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து தலைமை நீதிபதி, “மத் திய அரசின் அறிக்கையை கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுக்கும் அனுப்புங்கள். இந்த அறிக்கை தொடர்பான கருத்தை சம்பந்தப்பட்ட‌ மாநில அரசுகள் 16-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண் டும்” எனக்கூறி, வழக்கை புதன்கிழமைக்கு தள்ளி வைத்தார். பெங்களூருவில் தலைமையகம் மத்திய அரசு தாக்கல் செய்த 14 பக்க செயல் திட்ட வரைவு அறிக்கையில், “இந்த அமைப்புக்கு மூத்த பொறியாளர் அல்லது மூத்த ஐஏஎஸ் அதிகாரி அந்தஸ்தில் ஒரு தலைவரும், 2 முழு நேர உறுப்பினர்கள், 2 பகுதி நேர உறுப்பினர்கள், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் பகுதி நேர உறுப்பினர்கள் ஆகியோர் இடம்பெறுவர். இதுதவிர மத்திய அரசு தரப்பில் செயலாளர் ஒருவர் இருப்பார். இதன் தலைவர் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். அவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். இந்த அமைப்பு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். இதன் செயல்பாட்டுக்கான ஆரம்ப கட்ட நிதியாக மத் திய அரசு ரூ.2 கோடி வழங்கும். பிறகு இந்த அமைப்பின் செலவினங்களில் கர்நாடகாவும் தமிழகமும் 40%, கேரளா 15%, புதுச்சேரி 5% ஏற்க வேண்டும். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான அறிக்கைகள், முடிவுகள், கள ஆய்வு கள் அனைத்தையும் அந்த அமைப்பு கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த அமைப்பு உருவாக்கப்பட்டா லும் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் கர்நாடகாவின் கட்டுப்பாட்டிலும் மேட்டூர், லோயர் பவானி, அமராவதி உள்ளிட்ட அணைகள் தமிழகத்தின் கட்டுப்பாட்டிலும், பனசுரசாகர் கேரளாவின் கட்டுப்பாட்டிலும் இருக்கும். ஆனால் மாநில அரசுகள் அங்கு எந்த பணியையும் தன்னிச்சையாக செய்ய முடியாது. காவிரி நதி நீர் பங்கீட்டு அமைப்பின் வழிகாட்டுதலின்படியே செயல்பட வேண்டும். காவிரி நீர் பங்கீட்டில் சிக்கலோ, நீர் திறப்பில் தாமதமோ, பற்றாக்குறையோ ஏற்பட்டால் அதனை அமைப்பு கவனித்துக்கொள்ள வேண்டும். அமைப்பின் உத்தரவை மதிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசிடம் முறை யிட வேண்டும். மத்திய அரசின் முடிவு இறுதியானதாக இருக்கும். இந்த அமைப்பு விவசாயம் சார்ந்த வழிகாட்டுதல்கள், தொழில்நுட்ப அறிவுரைகளை மாநில அரசுகளுக்கு வழங்கலாம். 4 மாநிலங்களின் அணைகள், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காவிரி அமைப்பு ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ஒவ் வொரு நீர் ஆண்டு ஜூன் மாதமும், அணைகளில் உள்ள நீரின் இருப்பு எவ்வளவு என்பதை இந்தக் குழு ஆய்வு செய்யும். அணைகளில் உள்ள நீர் இருப்பைக் கண்காணித்தல், மாநிலங்களுக்கு தீர்ப் பின் அடிப்படையில் நீரை பகிர்ந்தளித் தல் ஆகியவற்றை மேற்கொண்டு நீர் பங்கீட்டை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வரும். அணைகளில் உள்ள நீரைக் கண்காணித்து, நீர் திறந்துவிடு வது உளிட்டவற்றை இந்த அமைப்பு மேற்கொள்ளும். இதற்காக கர்நாடகா- தமிழக எல்லையில் உள்ள பிலிகுண் டுலுவில் அளவை நிலையம் அமைத்து கண்காணிக்கும். இந்த அமைப்பு 10 நாளைக்கு ஒருமுறை நீர் திறந்துவிடும்படி மாநில அரசுக்கு ஆணையிடும். இதேபோல உபரி நீரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கும். இந்த அமைப்பு காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அதிகாரம் படைத்த அமைப்பாக இருக்கும்” என மத்திய அர சின் வரைவுத் திட்டத்தில் கூறப்பட் டுள்ளது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வரும் போது, இதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிக்கையை 4 மாநில அரசுகளும் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.

Comments