தலித் ஆதரவு இல்லாமல் பாஜக வெற்றி பெற முடியுமா..?

தலித் ஆதரவு இல்லாமல் பாஜக வெற்றி பெற முடியுமா..? | இந்திய வாக்காளர்களில் முஸ்லிம்கள் வெறும் 15 சதவீதம்தான். அவர்கள் எப்போதுமே பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்பது மாறாத உண்மை. 1989-ம் ஆண்டுக்குப் பிந்தைய அரசியலில் காங்கிரஸைக் கைவிட்ட முஸ்லிம்கள், முலாயம் சிங் யாதவ் போன்ற பிற்படுத்தப்பட்ட தலைவர்களை ஆதரித்தனர். மாயாவதியின் தலித் ஆதரவாளர்களும் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுத்துள்ளனர். 2014-ல் இதை மாற்றினார் மோடி. அனைத்து மதத்தினரின் ஓட்டுகளையும் பெறுவதற்காக மதச்சார்பற்ற கட்சி போல காட்டிக் கொள்ளும் போக்கை கைவிட்டார். ‘நமக்கு ஓட்டுப் போட மாட்டோம் என முஸ்லிம்கள் சொன்னால், சொல்லிவிட்டுப் போகட்டும்.. நமக்கு வேறு இடத்தில் போதுமான ஓட்டு இருக்கிறது..’ என்பது அவருடைய வாதம். சிறுபான்மையினருக்கு எந்த சலுகையும் கிடையாது.. எல்லோரும் ஒன்றாய் இருப்போம்... எல்லோருக்கும் வளர்ச்சி.. என்பதில் மோடி தெளிவாக இருந்தார். முஸ்லிம்கள் அவருக்கு ஓட்டுப் போடவில்லை. இருந்தாலும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லாமல் மக்களவைத் தேர்தலில் 282 இடங்களில் வென்றார். மாநில தேர்தல்களிலும் இதே நிலைதான் நீடித்தது. 19 சதவீத முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட உ.பி.யில் ஒரு முஸ்லிமைக் கூட வேட்பாளராக நிறுத்தாமல், 77 சதவீத இடங்களில் பாஜக வென்றது. ‘டெக்கான் க்ரானிகிள்’ பத்திரிகையில் சமூக வளர்ச்சி ஆய்வு மையத்தின் ஆய்வாளர் சஞ்சய் குமார் எழுதிய கட்டுரையில், ‘கடந்த காலங்களில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு 12 முதல் 14 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. 2014 தேர்தலில் இந்த எண்ணிக்கை காங்கிரஸ் (19%), பகுஜன் சமாஜ் கட்சியை (14%) விடவும் அதிகமாக 24 சதவீதமாக உயர்ந்தது’ என கூறியுள்ளார். இந்த வளர்ச்சியை தலித்துகளின் சமீபத்திய கோபம் பாதிக்கும். உ.பி.யில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கூட்டணி சேர்வதால் இது மேலும் பாதிக்கும். கோரக்பூர், புல்பூர் தேர்தல் முடிவுகளே இதற்கு சாட்சி. பகுஜன் சமாஜ், தான் போட்டியிடாவிட்டாலும் தனது ஓட்டுகளை சமாஜ்வாதிக்கு மாற்ற முடிந்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. வெமுலா, பீமா-கோரேகான் பிரச்சினைகள் போதாதென்று குவாலியரில் தலித் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது உயர்சாதியினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை. கவனமாகப் பார்த்தால் அந்த நல்ல சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கமும் அதில் தெரியவில்லை. இருந்தாலும் நாடு முழுவதும் நடந்த தலித் ஆர்ப்பாட்டங்கள் அவர்களின் கோபம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. 2019-ல் மோடி மேஜிக் இதையெல்லாம் சரிக்கட்டி விடும் என பிரதமரும் அமித் ஷாவும் இதை அலட்சியப்படுத்தி விட முடியாது. 2014-ல் வாங்கிய 24 சதவீத தலித் ஓட்டுகளை அவர்களால் இழக்க முடியாது. பாஜகவுக்கு 31 சதவீத வாக்கு வங்கி உள்ளது. தலித்துகள் ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த அளவுக்கு வாக்குகளைப் பெற முடியாது. தலித்துகளில் பெரும்பாலோர் பள்ளி, கல்லூரிக்குச் செல்கின்றனர். இன்டர்நெட் வசதியும் இருக்கிறது. இதனால் விஷயம் தெரிந்தவர்களாக உள்ளனர். இளம் தலைவரும் முதல்முறை எம்எல்ஏவுமான ஜிக்னேஷ் மேவானி போன்றோரால், நாடு முழுவதிலுமே எங்கு சென்றாலும் கூட்டத்தைச் சேர்க்க முடிகிறது. கடந்த 1989-ம் ஆண்டு வரை இந்து சமூகத்தில் இருந்த சாதி வேறுபாடு காரணமாக, வெற்றி பெறுவது கஷ்டம் என பாஜக நினைத்தது. அயோத்தி ரத யாத்திரை மூலம் எல்.கே. அத்வானி, சாதிகள் பிரித்த மதத்தை ஒன்றாக இணைத்தார். அது பாஜகவுக்கு கைகொடுத்தது. ஆனால் சாதிப் பற்று காரணமாக இது நீண்ட காலத்துக்கு உதவவில்லை. அதனால்தான் உ.பி.யில் ஒரு காலத்தில் பெரும்பான்மையைப் பெற்ற பாஜகவால் அதை தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை. மாயாவதியும் அகிலேஷும் மாறி மாறி 8 முறை முதல்வராக இருந்தார்கள். பாஜகவில் அத்வானி ஏற்படுத்திய வளர்ச்சியை விடவும் 2014-ல் மோடி- அமித் ஷா கூட்டணி ஏற்படுத்திய வளர்ச்சி அதிகமானது. இந்துத்வா தேசியவாதம், மோடியின் கவர்ச்சி, குஜராத் வளர்ச்சியால் மோடிக்கு உருவான நற்பெயரால் ‘நல்ல நாள் வரப் போகுது’ என்ற வாக்குறுதியையும் இணைத்தார்கள். இது சாதி வேறுபாட்டைத் தாண்டி உ.பி,யில் பாஜக வெற்றி பெற உதவியது. தற்போது சாதிப் பாகுபாடு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. அதோடு ஆளும் கட்சிக்கு எதிரான மனப்பான்மை, வேலைவாய்ப்பு இல்லாத நிலை, உயர் சாதியை சேர்ந்த ஒருவர் உ.பி. முதல்வராக உயர்ந்திருப்பது எல்லாம் சேர்ந்து சாதி உணர்வை அதிகப்படுத்தியுள்ளன. மோடியும் ஷாவும் இதுகுறித்து விவாதித்துள்ளனர். இருந்தாலும் பிரச்சினையைத் தீர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. முதலில் கட்சியில் வலுவான தலித் தலைவர்கள் இல்லை. இரண்டாவதாக நரேந்திர மோடிபோன்ற பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் உருவாகவில்லை. 2014-க்குப் பிறகு மகாராஷ்டிரா, உ.பி.யில் உயர் சாதியினரின் ஆதிக்கம்தான் அதிகரித்துள்ளது. மூன்றாவதாக, அதிகரித்து வரும் தலித்துகளின் ஆத்திரம் குறித்து மிகவும் தாமதமாகத்தான் கட்சியும் அரசும் தெரிந்து கொண்டன. எப்படியோ கட்சி இந்த விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பு எந்த அளவுக்கு சரிசெய்யப்படுகிறதோ அதுதான் 2019 தேர்தலில் எதிரொலிக்கும். சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர் தமிழில்: எஸ்.ரவீந்திரன்

Comments