அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு சம்பந்தமில்லை அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு சம்பந்தமில்லை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச் சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுதவிர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சி கள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 10-ம் தேதி ஐபிஎல் போட்டி நடக்கிறது. இப்போட்டிகளை நடத்தக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட சில கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர்டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே அறிவுசார் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆளுநர் தன் அதிகாரத்துக்கு உட்பட்டு துணைவேந்தரை நியமித்துள்ளார். இதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதேநேரம் தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஐபிஎல் போட்டிகள் மாநில அரசு நடத்தும் கிரிக்கெட் போட்டிகள் இல்லை. ஒரு வாரியம் நடத்துகிறது. அந்த வாரியத்தினர் தற்போது தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து உணர்ந்திருப்பார்கள். எனவே நடத்துவதா, நடத்தக் கூடாதா என்பது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள். எங்களை பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த ஒரு குடிமகன் புகார் அளித்தாலும், அந்த காவல் நிலைய அதிகாரி பாதுகாப்பு அளிப்பார். எனவே, மாநில அரசின் கடமை பாதுகாப்பு கொடுப்பதுதான். அவர்கள் கேட்டால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று சொல்ல முடியாது. இதுதான் நிதர்சனம். ஸ்கீம் என்றால் மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு குழுதான் என்று தெரியாமல் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வரும் 9-ம் தேதி நடக்கும் விசாரணையின் முடிவில், குழு அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், வரும் 12-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி வலியுறுத்துவார். தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்புதான் ஆட்சி செய்யும். காவிக்கு இங்கே இடமில்லை. காவிரி விவகாரத்தில் மும்முனை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments