இந்தியாவில் கூகுள் ஹோம் அறிமுகம்

கூகுள் ஹோம், கூகுள் மினி கருவிகளை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் வீட்டுப் பொருட்கள் பொது மேலாளர் ரிஷி சந்திரா. குரல் வழியாக தேடுபொறி வசதியை அளிக்கும் கூகுள் அசிஸ்டென்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு செயலி வசதி கொண்ட போன்களில் கூகுள் ஓகே செயலி கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் அசிஸ்டென்ஸ்-ன் கூகுள் ஹோம் மற்றும் கூகுள் மினி கருவிகளின் விலை முறையே ரூ.9,999, ரூ.4,499 ஆகும். இந்த கருவிகள் பிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கும். தவிர ரிலையன்ஸ் டிஜிட்டல், டாடா குரோமா போன்ற முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கும். தற்போது இந்தி மற்றும் ஆங்கிலம் மொழியிலும்,தொடர்ந்து இதர மொழிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று கூகுள் நிறுவனத்தின் வீட்டுப் பொருட்கள் பொது மேலாளர் ரிஷி சந்திரா கூறியுள்ளார். 4.5 லட்சம் பேர் புதிய சேவையில் இணைவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார். தேடுபொறி சேவையில் அடுத்த கட்டமாக உலகம் குரல் வழி சேவைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதற்கு கூகுள் அசிஸ்டென்ஸ் கருவி உதவும். எழுத்துகளின் உதவியில்லாமல் தேட உதவும் என்றார். கூகுள் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் ராஜன் ஆனந்தன் கூறுகையில், உலகம் முழுவதும் தற்போது 119 மொழிகளில் 1 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், கூகுள் ஓகே செயலி மூலம் மொபைல் போனில் டைப் செய்யாமல் குரல் வழியாக தகவல்களைத் தேடலாம் என்றும் கூறினார்.

Comments