பிளிப்கார்ட்டை வாங்க அமேசான் திட்டம்

பிளிப்கார்ட்டை வாங்க அமேசான் திட்டம் இந்தியாவின் முக்கியமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டை, அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தெரிகிறது. வால்மார்ட் நிறுவனம் ஏற்கெனவே பிளிப்கார்ட் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் அமேசான் நிறுவனமும் பிளிப்கார்ட்டை வாங்குவதற்கான போட்டியில் இறங்கி இருக்கிறது. அமேசான் நிறுவனம் ஆரம்பகட்ட பேச்சு வார்த்தையை தொடங்கி இருந்தாலும், வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட்டை கையகப்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசானுடன் பிளிப்கார்ட் இணைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஒரு வேளை இணைவதாக இருந்தால் கூட `மோனோபோலி’ பிரச்சினைகள் எழக்கூடும். அதனால் வாய்ப்புகள் இல்லை என விவரம் அறிந்த ஒருவர் கூறினார். இது குறித்து அமேசான், பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் ஆகிய நிறுவனங்கள் கருத்து கூற மறுத்துவிட்டன. பிளிப்கார்டில் 40 சதவீத பங்குகளை வாங்க வால்மார்ட் திட்டமிட்டிருப்பதாக கடந்த பிப்ரவரியில் செய்திகள் வெளியாயின. ஒரு வேளை இந்த முதலீடு நடக்கும் பட்சத்தில் ரீடெய்ல் துறையில் செய்யப்பட்டிருக்கும் மிகப்பெரிய முதலீடு என மார்கன் ஸ்டான்லி கருத்து தெரிவித்திருக்கிறது. இந்த இணைப்பு நடக்கும்பட்சத்தில் பிளிப்கார்ட் மதிப்பு 2,100 கோடி டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டிருகிறது. சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இணை கடந்த 2007-ம் ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடங்கியது. தற்போது இந்திய ரீடெய்ல் சந்தையில் 40 சதவீதம் பிளிப்கார்ட் வசம் இருக்கிறது. ஆரம்பத்தில் புத்தக விற்பனையுடன் தொடங்கப்பட்ட நிறுவனம் தற்போது அனைத்துவிதமான பொருட்களையும் விற்பனை செய்கிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் டைகர் குளோபல், இபே, மைக்ரோசாப்ட், டென்சென்ட், சாப்ட்பேங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. அமேசான் மற்றும் வால்மார்ட் தவிர கூகுள் நிறுவனமும் பிளிப்கார்டில் முதலீடு செய்ய திட்டமிடுவதாக ஒரு மாதத்துக்கு முன்பு தகவல் வெளியானது.

Comments