சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் உடனடியாக அமலுக்கு வந்தது

நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து இருப்பது பல்வேறு தரப்பினரிடமும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. தொடர் கற்பழிப்புகள் காஷ்மீர் மற்றும் குஜராத்தில் முறையே 8 மற்றும் 9 வயது சிறுமிகள் கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டதும், உத்தரபிரதேசத்தின் உன்னாவில் 17 வயது சிறுமி ஒருவர் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்டதும் சமீபத்தில் நாட்டை உலுக்கியது. டெல்லி நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை போல நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த மகளிர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என அரசை வலியுறுத்தினர். அவசர சட்டம் இதைப்போல பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய மந்திரி மேனகா காந்தி உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்திய குற்றப் பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் ‘போக்சோ’ சட்டம் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொண்டு அவசர சட்டமாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் இந்த அவசர சட்டத்துக்கு நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அவசர சட்டத்தின்படி 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படும். இதில் குறைந்தபட்ச தண்டனையாக இருந்த 7 ஆண்டு கடுங்காவல், 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது. மேலும் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப இதை வாழ்நாள் சிறையாகவும் விரிவுபடுத்த இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. அமலுக்கு வந்தது 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு வாழ்நாள் சிறை விதிக்கப்படும். இதில் குறைந்தபட்ச தண்டனையான 10 ஆண்டு சிறை, 20 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதிலும் வாழ்நாள் சிறை தண்டனையாக விரிவுபடுத்த வகை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த கற்பழிப்பு வழக்குகளின் விசாரணை 2 மாதங்களில் முடித்து, மேல்முறையீடு மனுக்கள் 6 மாதங்களுக்குள் முடித்து வைக்க வேண்டும். அத்துடன் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்பு அல்லது கூட்டு பலாத்காரம் செய்வோருக்கு முன்ஜாமீனும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மகளிர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பொருளாதார குற்றவாளிகள் இதைப்போல பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய அதிகாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘பொருளாதார குற்றவாளிகள் அவசர சட்டம் 2018’-க்கும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி உள்ளிட்டோர் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கும் நிலையில், மேற்படி அவசர சட்டம் கொண்டு வந்திருப்பது கவனிக்கத்தக்கது. தீர்வாக அமையாது இதற்கிடையே, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்களை தடுத்து நிறுத்த, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பது மட்டுமே தீர்வாக அமையாது என்றும், இத்தகைய குற்றங்கள் குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி செய்யப்படவேண்டும் என்றும் ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற அமைப்பின் தலைவர் பிதிஷா பிள்ளை கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் ‘போக்சோ’ சட்டம் அமலுக்கு வந்த பின்னரும் கூட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது மற்றும் அவர்களுடைய மனநலனை மேம்படுத்துவது தொடர்பாக போதிய ஆலோசனைகள் வழங்கப்படுவது இல்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.

Comments