விருதுக்குரிய காவலர் ரைட்டர்  ரத்தினசாமி

அண்மைக் காலமாக காவல் துறையின் செயல்பாடுகள் வாட்ஸ் அப்பில் வெளியாகி, காவல் துறை அதிகாரிகளை கலங்கடித்துக் கொண்டிருக்கும் வேளையில், சிறந்த போலீஸ்காரர் என்ற பெயரெடுத்துள்ளவர் தான் கும்பகோணத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.ரத்தினசாமி. இவருக்கு கிடைத்த குடியரசுத் தலைவர் விருது இவரது அர்பணிப்புமிக்க பணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக திகழ் கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த ஆதீனக்குடியைச் சேர்ந்த இவர், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்து 1985-ம் ஆண்டு காவலர் பணிக்கு வந்தார். தற்போது சிறப்பு உதவி ஆய்வாளர் நிலைக்கு உயர்ந் துள்ளார். கும்பகோணம் உட்கோட்ட காவல் நிலையங்களின் வழக்குகள், தினமும் நடைபெறும் நிகழ்வுகள், விஐபிக்களின் வருகை, நீதிமன்ற வழக்குகள் என அனைத்தையும் நாள்தோறும் குறிப்பெடுத்து காவல் துறையின் உயர் அதிகாரிகளுக்கும் காவல் துணை கண்காணிப்பாளருக்கும் அனுப்பும் ரைட்டர் பணி இவருக்கானது. அதை சிறப்பாக செய்ததற்காக குடியரசுத் தலைவர் விருது தேடி வந்தது. இதுகுறித்து ரத்தினசாமியிடம் பேசினோம். அவர் நம்மிடம் கூறும்போது, “எனது 33 ஆண்டுகள் காவல் பணியில், 25 ஆண்டுகள் ரைட்டராக இருந்திருக்கிறேன். மூன்றாண்டுக்கு ஒரு முறை வெவ் வேறு காவல் நிலையத்துக்கு பணிமாறுதல் வழங்கினாலும், நான் கேம்ப் ஆபீஸ் ரைட்டராகவே பணியாற்றி வருகிறேன். கடந்த 2004-ல் தமிழக அரசின் முதல்வர் பதக்கம் கிடைத்தது. கடந்த 2016-ல் நடைபெற்ற மகா மக விழாவின்போது முக்கிய விருந்தினர்கள், போக்குவரத்து மாறுதல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக இப்போது குடியரசுத் தலைவர் விருதை வழங்கிய தமிழக முதல்வர், மெச்சத் தகுந்த பணி என பாராட்டியுள்ளார். இந்த பாராட்டையும் விருதையும் எனக்கானது என எடுத்துக் கொள்ளாமல், எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த சக காவல் துறையின் நண்பர்களுக்கும் சேர்த்து வழங்கியதாகவே பார்க்கிறேன்” என்கிறார் ரத்தினசாமி. எல்லோரும்தான் பணியாற்றுகின்றனர். ரத்தினசாமிக்கு மட்டும் விருது கிடைக்க காரணம் என்ன என விசாரித்தால், ‘அவர் அன்றன்று வழங்கப்படும் பணிகளை அன்றைய தினமே முடித்துவிடு கிறார். கோப்புகள் தேங்குவது என்பதே இவரிடம் கிடையாது’ என்கின்றனர் இவரை அறிந்த வர்கள். அதாவது செய்யும் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யும்போதுதான் அது அழகாகிறது என்பது மட்டுமல்ல முழுமையும் பெறுகிறது. இதுதான் ரைட்டர்  ரத்தினசாமி நமக்குச் சொல்லும் செய்தி.

Comments