ரூ.70,000 கோடி பற்றாக்குறை பணத் தட்டுப்பாடு குறித்து எஸ்பிஐ ஆய்வறிக்கை தகவல்

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பணத் தட்டுப்பாடு இல்லை என கூறிவந்தாலும் சுமார் ரூ.70,000 கோடி அளவுக்கு தட்டுப்பாடு இருப்பதாக எஸ்பிஐ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக இந்த நிறுவனம் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் மக்களிடம் இருக்கும் பணத்தின் அளவு ரூ.19.4 லட்சம் கோடியாக இருக்கிறது. ஆனால் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு ரூ.17.5 கோடியாக இருக்கிறது. இந்த இடைவெளியான ரூ.1.9 லட்சம் கோடி பணப்பற்றாக்குறைக்கு காரணமாகும். பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை படிப்படியாகக் குறைந்து ரூ.1.2 லட்சம் கோடியாக இருக்கிறது. இதனால் மொத்தமாக ரூ.70,000 கோடி அளவுக்கு பணத்தட்டுப்பாடு இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் ரூ.15,29,100 கோடி அளவுக்கு ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டது. இது முந்தைய ஆறு மாத காலத்தை விட 12.2 சதவீத உயர் வாகும். அதே சமயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏடிஎம்களில் நிரப்பப்படும் பணம் அதிகரித்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகள் பணத்தட்டுப்பாடு சில பகுதிகளில் மட்டும் இருப்பதாக தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நீரஜ் வியாஸ் கூறும் போது பணத்தட்டுப்பாடு விரை வில் நீங்கி இயல்பு நிலை திரும்பும் என தெரிவித்தார்.

Comments