சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவதை தடுப்பது குறித்து ஆராய மத்திய உயர்நிலைக் குழு அமைப்பு பெண் உட்பட மேலும் 3 பேர் கைது

சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதாரம் மற்றும் 10-ம் வகுப்பு கணிதப் பாடத்துக்கான தேர்வு வினாத்தாள்கள் கடந்த மாதம் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தேர்வுக்கு முன்பே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மட்டும் வரும் 25-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதை எதிர்த்து பல பகுதிகளில் பெற்றோரும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உறுதியாக கூறியது. இந்நிலையில், மத்திய உயர்கல்வித் துறை முன்னாள் செயலாளர் வினய் ஷீல் ஓபராய் தலைமையில் 7 பேர் குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது. வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க, இப்போதைய நடைமுறைகளை ஆராய்வதுடன் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், தவறு நேராமல் இருப்பதற்கான பாதுகாப்பு அம்சங்கள், வினாத்தாள்களை எந்த முறைகேடும் இல்லாமல் தேர்வு மையத்துக்கு அனுப்புவதில் தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்துவது குறித்து ஆராய்ந்து இக்குழு அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் சிபிஎஸ்இ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு தொடர்பாக இமாச்சல பிரதேச மாநிலம் உனா நகர் டிஏவி பள்ளியைச் சேர்ந்த பொருளாதாரப் பிரிவு ஆசிரியர் ராகேஷ் குமார், கிளார்க் அமித் சர்மா, பியூன் அசோக் குமார் ஆகிய 3 பேரை டெல்லி போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 10-ம் வகுப்பு கணிதப் பாட வினாத்தாளையும் கசியவிட்டதாக ராகேஷ் சர்மா ஒப்புக் கொண்டார். விசாரணையின் போது அவர் அளித்த தகவலின்படி பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டெல்லி போலீஸார் நேற்று தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் உட்பட 30 குழுக்களுக்கு கணிதப்பாட வினாத்தாளை வாட்ஸ் அப்பில் ராகேஷ் குமார் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிகிறது. - பிடிஐ

Comments