எஸ்எம்எஸ் மூலம் 2 நிமிடத்தில் தேர்வு முடிவுகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.

எஸ்.எம்.எஸ் மூலம் 2 நிமிடத்தில் தேர்வு முடிவுகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசு அறிவித்த தேதியில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் இரண்டு நிமிடத்தில் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் தனியார் கல்லூரியில் நடைபெற்றுவரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவிகளுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசு அறிவித்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதியில் இரண்டு நிமிடங்களில் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தேர்ச்சி விவரங்கள் குறித்த தகவல் அனுப்பப்படும். போட்டித் தேர்வுகளுக்காக நடத்தப்படும் பயிற்சி முகாம்களால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் 3,146 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில், 2 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் ஏதும் அரசுக்கு இல்லை. எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். முதல் வகுப்பு, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும். 6, 7, 8 வகுப்புகளுக்கு 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றார். பள்ளிகள் மீது நடவடிக்கை இதற்கிடையே திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, கோடைகால விடுமுறையின்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எங்கேனும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் வரப்பெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டிலேயே நீட் தேர்வை எழுதுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

Comments