மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நிதி உதவியை மறுத்த கல்வி அதிகாரிக்கு ரூ.2 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான், வாணியம்பாடி திரு.வி.க.நகரில் அரசு உதவி பெறும் பள்ளி நடத்தி வருகிறேன். பள்ளி வேறொரு முகவரிக்கு மாற்றப்பட்டதற்காக 2014-2015-ம் ஆண்டுக்கு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய அரசின் நிதி உதவியை வழங்க அப்போதைய நாட்ராம்பள்ளி உதவி தொடக்கக்கல்வி அதிகாரி சித்ரா மறுத்து விட்டார். ஐகோர்ட்டு மற்றும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்ட போதும் அதை ஏற்க சித்ரா மறுத்து விட்டார். இதனால் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகை மறுக்கப்பட்டது. எனவே, அதிகாரி சித்ரா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை உரிய காரணம் இல்லாமல் தடுத்து இருப்பது மனித உரிமை மீறல் ஆகும். எனவே, அதிகாரி சித்ராவுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு வழங்கி விட்டு சித்ராவின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். சித்ரா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2014-2015-ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய அரசின் நிதி உதவியையும் பள்ளிக்கு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Comments