இன்று (ஏப்ரல் 22-ந்தேதி) சர்வதேச பூமி தினம்.

பூமி எங்கும் தூய்மை காப்போம்! கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இந்த பூமி நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்து இல்லை. நமது வருங்காலத்தினரிடமிருந்து நாம் பெற்றிருக்கும் கடன் என்கிறது ஒரு செவ்விந்திய பழமொழி. நூறு வருடங்கள் கூட இந்த பூமியில் முழுமையாக வாழ முடியாத நாம்தான், இந்த பூமியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தழைத்துக் கொண்டிருக்கும் எல்லா ஆற்றல்களையும் நமது ஆளுகைக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறோம். நிலத்துக்கும் நீருக்குமாக ஒருவரையொருவர் அடித்துக்கொண்டிருக்கிறோம். இந்த பிரச்சினைகள் போக நமக்கு கடனாக கொடுக்கப்பட்ட பூமியை எப்படியெல்லாம் சிதைக்க முடியுமோ அப்படியெல்லாம் சிதைத்துக்கொண்டிருக்கிறோம். நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டின் மூலம் மட்டும் இந்த பூமியை எப்படி சிதைத்துக்கொண்டிருக்கிறோம் தெரியுமா? நாம் பயன்படுத்தும் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் முழுமையாக அழிந்து மறுசுழற்சியாக குறைந்த பட்சம் 450 ஆண்டுகள் ஆகும். பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்களை நம்மால் மறுசுழற்சி செய்யவே முடியாது. இதனால் நிலத்தையும் நிலத்தின் தன்மையையும் கடுமையாக பாதிக்கிறது பிளாஸ்டிக். கடல்களில் பிளாஸ்டிக் பைகளை தின்று இறந்து கொண்டிருக்கும் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும் போது வெளியாகும் வாயுக்கள் விஷத்தன்மை கொண்டவை என்கிறது அறிவியல். ஆக எல்லா விதங்களிலும் ஆபத்தானது பிளாஸ்டிக். ஆனாலும் நாம் அதை தொடர்ச்சியாக பயன்படுத்துவதை நிறுத்த முடியவில்லை. இப்படி சூழலுக்கு ஆபத்தான விஷயங்கள் மீது கவனத்தை குவித்து சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதுதான் சர்வதேச பூமி தினத்தின் நோக்கம். 1970-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டார்கள். 150 வருடங்கள் தொழில் வளர்ச்சியின் மோசமான விளைவுகளை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். சூழல் பற்றிய முழுமையான விழிப்புணர்வு ஏற்படாத காலகட்டம் அது. ஆனால் 1962-ல் வெளியான ரேச்சல் கார்சனின் மவுன வசந்தம் புத்தகம் ஒரு புரட்சியை உண்டுபண்ணி இருந்தது. மிக அதிகமாக பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் பல்லுயிரியம் பாதிக்கப்படுவதை மக்கள் உணர்ந்திருந்தார்கள். இந்த நிகழ்வின் போது அமெரிக்க அதிபராயிருந்த நிக்சன் உடனடியாக எதிர்வினை ஆற்றினார். சூழலுக்கு ஆதரவான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அமெரிக்காவில் சூழல் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவில் தூவப்பட்ட விதை இப்போது 192 நாடுகளில் பரவியிருக்கிறது. அந்த ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு நோக்கத்தை முன்னிறுத்தி பூமி தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் சர்வதேச பூமி தினத்தின் நோக்கம், பிளாஸ்டிக் ஒழிப்பு. பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசரத் தேவை குறித்த பிரசாரங்கள் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அன்றாடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தினால் இந்த பூமி என்கிற கடனை நம்மால் வருங்கால சந்ததிக்கு செலுத்திவிட முடியும் என்பதுதான் இந்த வருடம் பூமி தினம் நமக்கு சொல்லும் எளிமையான செய்தி. பூமியை நேசிக்கிறோம் என்று நம்மில் எத்தனை பேர் சொல்லிக்கொள்கிறோம்? கடலிலும் மலைக்கருகிலும் செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் நமது இயற்கை மீதான நேசத்தை விளம்பரப்படுத்திக்கொள்ளும் நாம்தான் எந்தவிதமான குற்றவுணர்வுமின்றி பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பூமியை அழிக்கிறோம். குரங்கணி காட்டுத் தீவிபத்தில் இறந்து போன அத்தனை பேருமே இயற்கையின் மீது அபரிதமான நேசம் கொண்டவர்கள்தான். ஆனால் ஒன்றை நேசிப்பதற்கும் அதை புரிந்துகொள்வதற்குமான வித்தியாசத்தை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. காட்டின் தன்மையும் காட்டுத் தீயின் தன்மையும் தெரியாமலேயே அவர்கள் இறக்க நேர்ந்தது. கிட்டத்தட்ட பிளாஸ்டிக் விஷயத்திலும் அதுவே நடந்துக்கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் அழிய குறைந்த பட்சம் 450-ல் இருந்து ஆயிரம் வருடங்கள் ஆகுமென்றால் அப்போது நாம் இருக்கவா போகிறோம்? அப்போது பூமி என்ன ஆனால் நமக்கு என்ன? என்கிற அலட்சிய மனப்பான்மையும் அக்கறையின்மையும்தான் இன்று நமது அபரிதமான பிளாஸ்டிக் பயன்பாட்டின் அடித்தளம். ஆனால் பூமி என்பது என்ன? செடிகொடியும், மரமும், மலையும் கடலும் மட்டும்தானா? அதன் மீது வாழும் உயிரினங்களும் சேர்ந்ததுதான் பூமியும் இயற்கையும். இயற்கை என்பது நீங்களும் நானும். நம் எல்லா தாக்குதல்களையும் மீறி தன்னை தற்காத்துக்கொள்ளும் ஆற்றல் இயற்கைக்கு உள்ளது. அப்படி நிகழும் போது அந்த தாக்குதல்கள் நம் மீதே திரும்பவும் ஏவப்படும். அப்போது நாம் இயற்கையிலிருந்து முழுமையாக விலகி நிற்போம். இன்று நாம் சந்திக்கும் பல சூழல் பிரச்சினைகளுக்கு முக்கியமானதொரு காரணம் காலநிலை மாற்றம். திடீர் வெள்ளங்கள், நில நடுக்கங்கள் என்று பல பிரச்சினைகளுக்கு காரணம் கால நிலை மாற்றம். காலநிலை மாற்றம் மனித தவறு. அதே போல 100 ஆண்டுகள் கழித்து பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக இந்த உலகமும் அதில் வாழும் உயிரினங்களும் பல விளைவுகளை சந்திக்கும் போது மனித வாழ்வின் பொறுப்பற்ற தன்மையே அதற்கு காரணம் என்பதை அப்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். நாம் விரும்புவது அதைத்தானா? பிளாஸ்டிக் என்னும் ஆயுதத்திற்கு நமது சந்ததியினரை பலியாக்குவதுதான் நமது விருப்பமா? நாம் நிச்சயம் இயற்கையின் ஒரு அம்சம்தான். ஆனால் இயற்கையிடமிருந்து நம்மை பிரிக்கும் பல விசயங்களை நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம். அதில் ஒன்று பிளாஸ்டிக். கொஞ்சம் பிளாஸ்டிக்கை நமது வாழ்விலிருந்து குறைத்துப் பார்ப்போம். மலை உச்சிகளுக்கும் கடற்கரைகளுக்கும் நாம் செல்ல வேண்டாம். இயற்கை நம்மைத் தேடி வரும். இன்று (ஏப்ரல் 22-ந்தேதி) சர்வதேச பூமி தினம்.

Comments