எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 2 முறைக்கு மேல் பதவி வகிக்க ஏன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது? ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 2 முறைக்கு மேல் பதவி வகிக்க ஏன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது? ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி | எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் 2 முறைக்கு மேல் பதவி வகிக்கக்கூடாது என்று ஏன் கட்டுப்பாடு விதிக்கக்கூடாது? என ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். மருத்துவ அறிக்கை கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்த சுப்பையா என்பவர் 2016-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கலின்போது தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்வதுபோன்று உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இதன்மூலம் இடைத்தேர்தல்களை தவிர்க்கமுடியும். மக்களின் வரிப்பணம் விரயம் ஆவதை தடுக்கமுடியும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பாக உரிய முடிவு எடுக்க மத்திய அரசையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டிருந்தது. 2 முறை மட்டுமே பதவி அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘அமெரிக்காவில் 2 முறைக்கு மேல் அதிபர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கக்கூடாது என கட்டுப்பாடுகள் உள்ளன. அதுபோன்று ஒரு கட்டுப்பாடு இந்தியாவில் இல்லை. அமெரிக்காவை போன்று இந்தியாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது’ என்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால், வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின்போது தங்களது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பாக மத்திய சட்ட ஆணையத்தின் கருத்துகளை பெற்று தெரிவிக்க காலஅவகாசம் தேவை என்றார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 13-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Comments