தமிழகம் முழுவதும் 1,421 அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறும் வசதி 20-ம் தேதிக்குள் விரிவாக்கம் அஞ்சல் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகம் முழுவதும் 1,421 அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறும் வசதி 20-ம் தேதிக்குள் விரிவாக்கம் அஞ்சல் துறை அதிகாரிகள் தகவல் | தமிழகம் முழுவதும் உள்ள 1,421 அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறும் வசதி வரும் 20-ம் தேதிக்குள் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தியாவில் மிக முக்கிய மான அடையாள அட்டையாக ஆதார் அட்டை விளங்குகிறது. ஆதார் எண் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படுத்தப்படுகி றது. வங்கி சேவை, செல்பேசி இணைப்பு மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா சேவைகளைப் பெறவும் ஆதார் எண் உதவியாக உள்ளது. ஆதார் அட்டைகள் முதலில் அரசு இ-சேவை மையங்களில் மட்டும் வழங்கப்பட்டன. பின்னர் அஞ்சல் நிலையங்களிலும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 1,421 அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறும் வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை அஞ்சல் துறை தலைவர் எம்.சம்பத், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆர்.ஆனந்த் ஆகி யோர் ‘தி இந்து’விடம் கூறிய தாவது: மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு ஆதார் எண் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறும் வசதி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, நாடு முழுவதும் 8,791 ஆதார் எண் பெறுவதற்கான பெயர் பதிவு செய்தல் மற்றும் திருத்தம் செய்யும் மையங்களும், 10,082 ஆதார் திருத்தம் செய்யும் மையங்களும் உள்ளன. மாதம் ஒன்றுக்கு சராசரியாக 84 ஆயிரம் ஆதார் எண் பெயர் பதிவுகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறுவதற்கான மையங்கள் அமைக்க 1,435 அஞ்சலகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 14 மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. எஞ்சிய 1,421 மையங்கள் வரும் 20-ம் தேதிக்குள் செயல்படும். இதேபோல், சென்னை நகர மண்டலத்துக்கு உட்பட்ட அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறுவதற்கான மையங்கள் அமைக்க 316 அஞ்சலகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 16 மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. ஆதார் எண் பதிவு செய்தல், திருத்தம் செய்வதற்குத் தேவையான உபகரணங்கள் (கிட்) அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பயிற்சி பெற்ற ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதிதாக ஆதார் எண் பெறுவதற்கு ரூ.50-ம், திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.25-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்களில் கடந்தாண்டு ஜூன் முதல் இதுவரை 3,199 ஆதார் பெயர் பதிவும், 59,073 ஆதார் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. சென்னை நகர மண்டலத் தில் கடந்தாண்டு செப்டம்பர் முதல் 1,518 ஆதார் பெயர் பதிவும், 34,928 ஆதார் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. இச்சேவையை விரிவுபடுத்துவதன் மூலம், கிராம மக்கள் தங்கள் வீட்டு அருகே உள்ள அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று எளிதாக ஆதார் எண் பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments