பிராட்பேண்ட் வசதிகளை மேம்படுத்த தயாரிக்கப்பட்ட ஜிசாட்- 11 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தும் தேதி தள்ளிவைப்பு

பிராட்பேண்ட் வசதிகளை மேம்படுத்த தயாரிக்கப்பட்ட ஜிசாட்- 11 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தும் தேதி தள்ளிவைப்பு இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல் இணைய வசதி மற்றும் பிராட்பேண்ட் வசதிகளை மேம்படுத்துவதற்காக இஸ்ரோ சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜிசாட்-11 செயற்கைக் கோளை பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவில் இணைய வசதி மற்றும் பிராட்பேண்ட் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1,117 கோடி மதிப்பீட்டில் செயற்கைக் கோளை அனுப்பும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 2016-ம் ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 5,700 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய ஜிசாட்-11 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ தயாரித்திருந்தது. இவ்வளவு எடை கொண்ட பெரிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை. அதனால், ஏரியன் ஸ்பேஸ் நிறுவனத்தின் மூலமாக தென் அமெரிக்க நாட்டின், பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வரும் மே 26-ம் தேதி ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக பெங்களூருவில் உருவாக்கப்பட்ட ஜிசாட்-11 செயற்கைக் கோள் பிரெஞ்சு கயானாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கடந்த மார்ச் 30-ம் தேதி அங்கு சென்று சேர்ந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப ரீதியாக அந்த செயற்கைக் கோளை மீண்டும் பரிசோதிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஜிசாட்-11 விண்ணில் செலுத்தும் நாள் மாற்றப்பட்டுள்ளது. அதன் விவரம் பிறகு தெரிவிக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது விண்ணில் செலுத்தப்பட்டால், வினாடிக்கு 12 ஜிபி தரவுகளை பதிவிறக்கவும், பதிவேற்றவும் முடியும். இது இந்தியாவின் மற்ற தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விட திறன் பெற்றதாக இருக்கும்.

Comments