ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு நாள் லாபம் ரூ.100 கோடி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாளொன்றுக்கு ரூ.100 கோடி வரை லாபம் ஈட்டி வருகிறது. நிறுவனத்தின் நான்காவது காலாண்டு முடிவுகளில் இது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த நிதியாண்டின் (2017-18) நான்காவது காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் நிறுவனத்தின் லாபம் 17 சதவீதம் அதிகரித்து ரூ.9,435 கோடியாக உள்ளது. பெட்ரோ கெமிக்கல்ஸ், சில்லரை வர்த்தகம், மின்னணு சேவை துறைகளில் இருந்து நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது. குறிப்பாக ஒரு நாளில் ரூ.105 கோடியை நிறுவனம் லாபமாக ஈட்டியுள்ளது. சுத்திகரிப்பு, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொழில்களில் இருந்து குறையும் லாபத்தை பெட்ரோ கெமிக்கல், சில்லரை வர்த்தகத் தொழில்கள் ஈடுகட்டி வருகின்றன. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.8,046 கோடியாக இருந்தது. ஜியோ பிராண்டின் கீழ் மின்னணு தொழில்களை ரிலையன்ஸ் மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜியோ நிறுவனம் ரூ.510 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. ஜியோ நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது முறையாக லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ நிறுவனம், பார்தி ஏர்டெல் நிறுவனத்தை விட ஆறு மடங்கு அதிகமாக லாபம் ஈட்டியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.83 கோடி நிகர லாபத்தினை பதிவு செய்துள்ளது. மின்னணு சேவைத் துறையின் செயல்பாட்டு லாபம் ரூ.1,495 கோடியுடன் ஒப்பிடுகையில், செயல்பாட்டு நஷ்டம் ரூ.32 கோடியாக உள்ளது. நான்காவது காலாண்டின் மொத்த வருமானம் ரூ.8,421 கோடியாக உள்ளது. சந்தாதாரர்களின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு ஒட்டுமொத்த வருவாய் 39 சதவீதம் உயர்ந்து ரூ.1.29 லட்சம் கோடியாக உள்ளது. நிறுவனத்தின் பெட்ரோ கெமில்லல் தொழிலில் புதிய திட்டங்கள் மூலம் வருவாய் உயர்ந்துள்ளது. சில்லரை வர்த்தகத் தொழில் 134 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2017-18 ஒட்டுமொத்த நிதியாண்டில் நிறுவனத்தின் லாபம் 21 சதவீதம் உயர்ந்து ரூ.36,075 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த வருமானம் 31 சதவீதம் அதிகரித்து ரூ.4.3 லட்சம் கோடியாக இருக்கிறது. செயல்பாட்டு லாபம் 34 சதவீதம் உயர்ந்து 74,184 கோடியாக உள்ளது. 2017-18 நிதியாண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. செயல்பாட்டு அளவிலும் லாபம் ஈட்டிய வகையிலும் பல சாதனைகளை செய்துள்ளது என்று நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். 1,000 கோடி டாலருக்கு மேல் செயல்பாட்டு லாபம் ஈட்டிய முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ

Comments