10, 11, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு ‘ஜாக்டோ’ அமைப்பு அறிவிப்பு

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
10, 11, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு ‘ஜாக்டோ’ அமைப்பு அறிவிப்பு | பல்வேறு ஆசிரியர் சங்கங்களை உள்ளடக்கிய ‘ஜாக்டோ’ அமைப்பு சார்பில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சியில் கடந்த 8-ந் தேதி நடைபெற்ற ‘ஜாக்டோ’ அமைப்பின் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) முதல் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியின் போது, தினமும் 1 மணி நேரம் கோரிக்கை முழக்க போராட்டம் நடத்துவதாக திட்டமிட்டுள்ளோம். அதே நேரத்தில், 24-ந் தேதி 10-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குவதற்குள் எங்களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், 24-ந் தேதி முதல் 10, 11, 12-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணியை புறக்கணித்து மறியல் மற்றும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments