உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருட்டு ‘பேஸ்புக்’ அதிபர் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டார் ஜூக்கர் பெர்க்

உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருட்டு 'பேஸ்புக்' அதிபர் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டார் ஜூக்கர் பெர்க் | உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில், 'பேஸ்புக்' சமூக வலைத்தள அதிபர் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டார். தகவல்கள் திருட்டு உலக மக்களின் பேராதரவை பெற்ற சமூக வலைத்தளமாக 'பேஸ்புக்' என்னும் முகநூல் திகழ்கிறது. ஏறத்தாழ 200 கோடிக்கு மேற்பட்டோர் இதை பயன்படுத்தி தகவல்கள், படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் செயல்படுகிற தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனமான 'கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா' 5 கோடிப் பேரின் தகவல்களை திருடி உள்ளது. இந்த தகவல் திருட்டு, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி நடந்து உள்ளது. இது குறித்த தகவல்கள் வெளியாகி உலக அரங்கை உலுக்கி உள்ளது. மன்னிப்பு இந்த நம்பிக்கை மோசடிக்காக 'பேஸ்புக்' சமூக வலைத்தள அதிபர் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டுக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் 'பேஸ்புக்' பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர், "இது மிகப்பெரிய நம்பிக்கை மோசடி ஆகும். இந்த நிகழ்வு நடந்ததற்காக நான் உள்ளபடியே மிகவும் வருந்துகிறேன். இது மீண்டும் ஒரு முறை நடக்காதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது" என கூறி உள்ளார். தனது நிறுவனம் தவறு செய்துவிட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டு உள்ளார். 'நானே பொறுப்பு' இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "நான்தான் பேஸ்புக்கை தொடங்கினேன். அதில் நடந்து உள்ள தவறுகளுக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். நமது சமூகத்தை பாதுகாப்பதில் நான் தீவிரமாக இருக்கிறேன். 'பேஸ்புக்' உபயோகிப்பாளர்களின் தகவல்களை காக்க வேண்டிய பொறுப்பு, 'பேஸ்புக்'கிற்கு இருக்கிறது. அதில் நாங்கள் தவறுகிறபோது, உங்களுக்கு சேவை செய்கிற தகுதியை இழந்தவர்கள் ஆகிறோம்" என கூறி உள்ளார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் யாருடைய தகவல்களை எல்லாம் நாடியதோ, அவர்கள் ஒவ்வொருவரையும் உஷார்படுத்துவோம் எனவும் அவர் கோடிட்டுக் காட்டி உள்ளார். 'நடவடிக்கை எடுப்போம்' இது தொடர்பாக சி.என்.என். நிறுவனத்துக்கும் ஜூக்கர்பெர்க் பேட்டி அளித்தார். அதில் அவர், "நிச்சயமாக தவறு நேர்ந்துவிட்டது. நாங்கள் அதை கவனிக்கிறோம். அந்த தருணத்தில் நாங்கள் செய்ய வேண்டியதை செய்யாமல் போய்விட்டோம் என்பதற்காக வருந்துகிறேன். எப்படி இப்படி நேர்ந்தது என்பதை கண்டறிய ஒவ்வொரு செயலியையும் நாங்கள் ஆராய்வோம். சந்தேகப்படும்படியான எந்தவொரு செய்கையையும் நாங்கள் முழுமையான தடயவியல் சோதனைக்கு உட்படுத்துவோம். ஆயிரக்கணக்கான செயலிகளை நாங்கள் மறுஆய்வு செய்வோம்" என்று கூறினார். ஜூக்கர்பெர்க், 'பேஸ்புக்' தகவல்கள் தவறாகப் பயன்படுத்துப்படாமல் தடுக்கிற விதத்தில் தொழில்நுட்ப ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்து உள்ளார். செய்யப்போவது என்ன? மேலும், சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற அனைத்து செயலிகளும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்; முழுமையான தணிக்கைக்கு ஒத்துப்போகாத எந்த ஒரு டெவலப்பர்களையும் கண்டுபிடித்தால், தடை செய்வோம்; தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலை தவறாக பயன்படுத்துகிற டெவலப்பர்களை கண்டுபிடித்தால், நாங்கள் அவற்றை தடைசெய்வோம். அந்த பயன்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிப்போம்; தகவல்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க, டெவலப்பர்களின் தரவு அணுகலை இன்னும் கட்டுப்படுத்துவோம். நீங்கள் உள்ளே நுழைகிறபோது, தருகிற தகவல்களை குறைப்போம். உங்கள் பெயர், சுயவிவர புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை மட்டுமே கேட்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். பாதுகாப்பு அதிகரிக்கப்படும் ஜூக்கர்பெர்க், 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்து உள்ள பேட்டியில், "இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தனது நேர்மையை உறுதி செய்கிற விதத்தில் 'பேஸ்புக்' பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படும்" என உறுதி அளித்து உள்ளார்.

Comments