பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விதி பின்பற்றப்படுகிறதா? முதன்மை கல்வி அதிகாரி தலைமையிலான குழு ஆய்வு செய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விதி பின்பற்றப்படுகிறதா? முதன்மை கல்வி அதிகாரி தலைமையிலான குழு ஆய்வு செய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு | பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விதி பின்பற்றப்படுகிறதா? என்று முதன்மை கல்வி அதிகாரி தலைமையிலான குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிகளின் கட்டிடத்தை அனைத்து கோணத்திலும் ஆய்வு செய்ய வேண்டும், 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய கட்டிட விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது. தேசிய கட்டிட விதிகளில், 'அனைத்து பள்ளிகளிலும் தீ பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கட்டிடத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்' என்பது போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, தேசிய கட்டிட விதிகள் ஆகியவை நிறைவேற்றப்படாமல் வெறும் காகித அளவிலேயே இருக்கின்றன. எனவே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, தேசிய கட்டிட விதிகளை அமல் படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். ஆய்வு செய்ய வேண்டும் இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 'தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களும் தேசிய கட்டிட விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா?, அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு விதி பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் மாவட்ட அளவில் குழு அமைக்க தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குழு அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி ஏப்ரல் 9-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

Comments