2017 டிசம்பர் இறுதி நிலவரம் வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.8.41 லட்சம் கோடியை எட்டியது

2017 டிசம்பர் இறுதி நிலவரம் வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.8.41 லட்சம் கோடியை எட்டியது | 2017 டிசம்பர் இறுதி நிலவரப்படி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.8.41 லட்சம் கோடியை எட்டி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாராக்கடன்களால் இந்திய வங்கித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பொதுத்துறையைச் சேர்ந்த பல வங்கிகள் இதனால் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளன. வாராக்கடனைப் பொறுத்தவரை பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது தனியார் வங்கிகளுக்கு அதிக பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் கடன்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் இனி வரும் காலங்களில் பல பொதுத்துறை வங்கிகள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.8.41 லட்சம் கோடியை எட்டி உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கியின் வாராக்கடன் அதிகபட்சமாக ரூ.2.02 லட்சம் கோடியாக உள்ளது. அடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் ரூ.55,200 கோடியாக இருக்கிறது. ஐ.டீ.பீ.ஐ. (ரூ.44,542 கோடி), பேங்க் ஆப் இந்தியா (ரூ.43,474 கோடி), பேங்க் ஆப் பரோடா (ரூ.41,649 கோடி), யூனியன் பேங்க் ஆப் இந்தியா (ரூ.38,047 கோடி), கனரா வங்கி (ரூ.37,794), ஐசிஐசிஐ வங்கி (ரூ.33,849 கோடி) ஆகிய வங்கிகளுக்கும் அதிக அளவில் வாராக்கடன்கள் உள்ளன. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா பாராளுமன்ற மக்களவையில் எழுத்து மூலமான பதில் ஒன்றில் இந்த புள்ளிவிவரங்களை அளித்துள்ளார். பொதுத்துறை வங்கிகள் முன்னுரிமை அடிப்படையில் மத்திய அரசுக்கு பங்குகள் ஒதுக்கி கூடுதல் மூலதனம் பெற்று வருகின்றன. வாராக்கடனால் பாதிக்கப்பட்டுள்ள இந்த வங்கிகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி அளவிற்கு மறுமூலதனம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரூ.1.35 லட்சம் கோடி மறுமூலதன கடன்பத்திரங்கள் வாயிலாக திரட்டப்பட உள்ளது. மீதமுள்ள ரூ.76 ஆயிரம் கோடி மூலதன சந்தையில் நிதி திரட்டுதல் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் பெறப்படும் என தெரிகிறது.

Comments