ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உரிய பதவியில் குரூப்-1 அதிகாரிகளை நியமிக்க எதிர்ப்பு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் உள்துறை செயலாளருக்கு கடிதம்

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உரிய பதவியில் குரூப்-1 அதிகாரிகளை நியமிக்க எதிர்ப்பு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் உள்துறை செயலாளருக்கு கடிதம் | ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உரிய இடத்தில் குரூப்-1 போலீஸ் அதிகாரிகளை நியமிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும், தற்போதைய தமிழக தீயணைப்புத் துறை டிஜிபியுமான (இயக்குநர்) கே.பி.மகேந்திரன், தமிழக கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஐபிஎஸ்-ஆகத் தேர்வாகி வரும் இளம் அதிகாரிகளுக்கு உரிய பதவியில் அவர்களை நியமிப்பதற்கு பதிலாக, தமிழக அரசு தேர்வாணையத்தின் மூலம் (குரூப்-1) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வரும் போலீஸ் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவியில் நியமிக்கப்பட்டு வருவது தொடர்பாக எங்கள் சங்க உறுப்பினர்கள் எங்களிடம் முறையிட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவியில் குரூப்-1 அதிகாரிகளை நியமிப்பது நாடாளுமன்றம் வகுத்துள்ள விதிகளை மீறுவதாகும். இது இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இந்திய போலீஸ் விதிகளின்படி, கேடர் ஆபிஸர் என்ற பதவியில் ஐபிஎஸ்-ஆகத் தேர்வாகி வரும் அதிகாரிகளை மட்டுமே நியமிக்க முடியும். இதில் வேறு யாரையும் நியமிக்க முடியாது. ஒவ்வொரு கேடர் ஆபிஸர் பதவியிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே, கேடர் ஆபிஸர் இல்லாத நிலையில், மாநில தேர்வாணையத்தின் மூலம் தேர்வான குரூப்-1 அதிகாரிகளை நியமித்துக் கொள்ளலாம். தமிழகத்தில் 143 கேடர் ஆபிஸர் பதவிக்கான இடங்கள் உள்ளன. மாவட்ட எஸ்பி காவல் துணை ஆணையர் (டிசி) பதவிக்காக 76 கேடர் ஆபிஸர் பதவிகள் உள்ளன. இதில் 76 பதவிகளில், 41 பதவிகளுக்கு கேடர் ஆபிஸர் இல்லாத குரூப்-1 மூலம் தேர்வான அதிகாரிகளே நிரப்பப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவுப்படி கேடர் ஆபிஸர் பதவியில் தகுதியான அதிகாரிகள் இருக்கின்ற சூழலில், அவர்களை நியமிக்காமல் கேடர் ஆபிஸர் அல்லாத குரூப்-1 அதிகாரிகளை நியமிக்க முடியாது. கேடர் ஆபிஸர் பதவியில், கேடர் ஆபிஸர் தகுதி இல்லாத அதிகாரிகளை நியமிக்கும்போது குழப்பமான நிலை உருவாகும். கேடர் ஆபிஸர் விதிமுறைகளை மீறுவது தமிழக காவல்துறைக்கு ஆரோக்கியமானதல்ல. எனவே, கேடர் ஆபிஸர் விதிமுறைகளுக்கு ஏற்றாற்போல் அந்தந்த பதவியில் ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ஒரு பிரதி தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Comments