தமிழகத்தின் ‘ஸ்லெட்’ தகுதி தேர்வில் லஞ்சம் பல்கலைக்கழக மானியக் குழுவில் புகார்

தமிழகத்தின் 'ஸ்லெட்' தகுதி தேர்வில் லஞ்சம் பல்கலைக்கழக மானியக் குழுவில் புகார் ஆர்.ஷபிமுன்னா பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியில் சேர தமிழக அரசால் நடத்தப்படும் 'ஸ்லெட்' தகுதித் தேர்வில் ரூ.3 லட்சம் வரை பெற்றுக்கொண்டு தேர்ச்சிபெற வைப்பதாக பல்கலைக்கழக மானியக்குழுவிடம் (யுஜிசி) புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு தேசிய அளவில் நெட் (NET) என்ற பெயரிலும் மாநில அளவில் ஸ்லெட் (SLET) என்ற பெயரிலும் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்காக தகுதி முதுநிலை பட்டம் மட்டுமே. இதில் வென்றவர்கள் உதவிப் பேராசிரியர்களாக அமர்த்தப்பட்டு வருகின்றனர். முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் தகுதித் தேர்வு விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு தற்போது அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ரூ.40 லட்சம் வரை லஞ்சமாகப் பெறப்படுவதாக புகார் நிலவுகிறது. இதன் அடிப்படையான ஸ்லெட் தகுதித்தேர்விலும் தேர்ச்சிக்காக லஞ்சம் பெறுவதாக புகார் கிளம்பியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யுஜிசிக்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளனர். இது குறித்து 'தி இந்து'விடம் யுஜிசி வட்டாரத்தில் கூறும்போது, 'நாடு முழுவதிலும் பல மாநிலங்களில் இருந்து ஸ்லெட் தகுதித்தேர்வு குறித்து புகார்கள் வந்துள்ளன. இதில் தமிழகத்தில் அதன் தேர்ச்சிக்காக ரூ.3 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக அதிக புகார்கள் வந்துள்ளன. வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டும், மதிப்பெண்களை அதிகரித்தும் செய்யப்படும் தவறுகளை ஆதாரங்களுடன் நிரூபிப்பது கடினம். இதன் காரணமாகவே தகுதித்தேர்வு முறையை முற்றிலுமாக ஒழித்துவிட யுஜிசி விரும்புகிறது" என்று தெரிவித்தனர். உதவிப் பேராசிரியர் பணிக்கு புதிய வரைவு விதிகளை யுஜிசி கடந்த வாரம் வெளியிட்டது. இதில் நெட், ஸ்லெட் தகுதித்தேர்வுகள் வலுவிழக்கும் வகையில், இவ்விரு தேர்வுகளும் இனி கூடுதல் தகுதியாக மட்டுமே கருதப்படும் எனவும் உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. தகுதித்தேர்வு முறையை நாளடைவில் முற்றிலுமாக ஒழித்துவிட்டு புதிய முறையை யுஜிசி அமலாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பாக இப்பணி அமர்த்துதலில் புதிய முறை அமலாக்கப்படும். இது, நீட் போன்று நாடு முழுவதிலும் ஒரே தேர்வாக நடத்தப்படவும் வாய்ப்புள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இருந்து யுஜிசிக்கு வந்த புகார்களை தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவாகவும் இது கருதப்படுகிறது. இதற்கிடையே அரசு உதவிபெறும் கல்லூரிகள் பணம் பெற்றுக்கொண்டு உதவிப் பேராசிரியர் பணி நியமனம் செய்வது அதிகரித்து வருகிறது. இதை எதிர்த்து அதிராம்பட்டினத்தில் உள்ள காதர் மொய்தீன் கல்லூரியின் முன் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தனியார் முஸ்லிம் கல்லூரியான இக்கல்லூரி எம்.கே.என். என்ற அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகிறது. மதுரை எம்.எஸ்.எஸ் வக்ஃபு கல்லூரியிலும் இதுபோல் பணம் பெறுவதாக சில மாதங்களுக்கு முன் கண்டனங்கள் எழுந்தன. இதுபோன்ற பிரச்சினையால் ஆர்ப்பாட்டம் தொடர வாய்ப்புள்ளது. ஆனால் நியாயமான முறையில் நேர்முகத்தேர்வு நடத்தும் அரசு உதவிபெறும் கல்லூரிகளும் தமிழகத்தில் உள்ளன. இது தொடர்பாக யுஜிசி வட்டாரத்தில் 'தி இந்து'விடம் கூறும்போது, "அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணம் பெற்றுக்கொண்டு பணி அளிக்கப்படுவது குறித்து மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்க முடியும். அதில் எங்களுக்கு அதிகாரம் இல்லை" என்று தெரிவித்தனர். 

Comments