சொத்து வரி வசூலை எளிமைப்படுத்த பார் கோடு அட்டை அறிமுகம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சொத்து வரி வசூலை எளிமைப்படுத்த பார் கோடு அட்டை அறிமுகம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை | சொத்து வரி வசூலிப்பை எளிமைப்படுத்த பார் கோடு வசதியுடன் கூடிய அட்டையை உரிமையாளர்களுக்கு வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் 12 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். சொத்து வரியாக ஆண்டுக்கு ரூ.750 கோடி வருவாய் கிடைக்கிறது. இதற்கு முன்பு சொத்தின் உரிமையாளர்களுக்கு ஒரு சொத்து வரி கணக்கு புத்தகம் வழங்கப்படும். அதில் சொத்து இருக்கும் மண்டலத்தின் எண், வார்டு எண் மற்றும் உரிமையாளருக்கு வழங்கப்பட்டுள்ள சொத்து வரி கணக்கு எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு முறையும் உரிமையாளரின் சொத்து வரி நிலுவையை தெரிந்துகொள்ள சம்மந்தப்பட்டவரின் சொத்து வரி கணக்கு எண்ணை கணினியில் இட வேண்டும். இந்நிலையில் சொத்து வரி வசூலிப்பை எளிமைப்படுத்தும் விதமாக பார் கோடு வசதியுடன் கூடிய சொத்து வரி கேட்பு அட்டையை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ''பார் கோடு வசதியுடன் கூடிய சொத்து வரி கேட்பு அட்டையை 12 லட்சம் உரிமையாளர்களுக்கு வழங்க இருக்கிறோம். இந்த அட்டைகளை அச்சிடும் பணிகளுக்காக ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய கருவியைக் கொண்டு அட்டையில் உள்ள பார் கோடை ஸ்கேன் செய்யும்போது, உரிமையாளரின் விவரம், அவருக்கு உள்ள சொத்தின் பரப்பளவு, அவர் செலுத்த வேண்டிய சொத்து வரி நிலுவை உள்ளிட்ட விவரங்கள் கணினி திரையில் வந்துவிடும். பின்னர் சொத்து வரியை வசூலித்துக்கொள்ளலாம். இதனால் நேர விரையும் குறைவதுடன் பணியாளர்களும் விரைவாக வரியை வசூலிக்கலாம்'' என்றார்.

Comments