கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டுமா? 3 நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரை

கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டுமா? 3 நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரை | கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்து 3 நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணயக்குழு 2015-2016-ம் கல்வி ஆண்டு முதல் அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், கட்டணம் நிர்ணயிக்கும் போது அனைத்து செலவுகளையும் கணக்கிட்டு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள விவேகானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளின் நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், 'கல்வி உரிமைச் சட்டத்தில் ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதோ அதையே பின்பற்ற வேண்டும் என்று கட்டண நிர்ணயக்குழு வலியுறுத்தி உள்ளது. அந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனத்தை கணக்கிட்டு அந்தக்குழு கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது. மாணவர்களின் நலன்கருதி தனியார் பள்ளிகள் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கின்றனர். இதனால் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இதை கட்டண கமிட்டி கருத்தில் கொள்ளவில்லை' என்று வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:- கல்வித்தரத்தை பேணுவதற்காக பள்ளிகள் தங்கள் விருப்பம்போல் ஆசிரியர்களை நியமிக்க உரிமை உள்ளது. கல்வி உரிமை சட்டத்தில் குறைந்தபட்ச ஆசிரியர்கள் நியமனம் குறித்து மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக எத்தனை ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனவே, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தை பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்து 3 நீதிபதிகள் விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது. விவேகானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை முறையாக நிர்ணயித்து உரிய முடிவு எடுக்க கட்டண நிர்ணயக் குழுவுக்கு உத்தரவிடுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments