மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் மத்திய மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் மத்திய மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் | மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளை தமிழக இளைஞர்கள் தமிழிலேயே எழுத அனுமதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங்குக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- உரிமை மறுக்கப்படுகிறது மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை நடத்துவதில் உள்ள பாரபட்சமான நடைமுறையால், வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த பாரபட்சமான அணுகுமுறை தேர்வு எழுதும் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களையும் மிகவும் பாதிக்கிறது. வடமாநில போட்டியாளர்கள் இத்தேர்வுகளை அவர்களுடைய தாய்மொழியான இந்தியில் எழுதும் உரிமையுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தங்கள் தாய்மொழியான தமிழில் தேர்வு எழுதும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் பணியில் சேருவது நியாயமற்ற முறையில் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழகத்தைச் சேர்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், வடமாநிலங்களை சேர்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு முடிகளை பார்த்தால் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கிலும், தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாத தென்மாநில போட்டியாளர்கள் சில நூறு பேர் என்ற அளவிலும் மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து வெறும் 111 பேர் தேர்வாகியிருக்கிறார்கள். ஆனால் டெல்லியிலிருந்தோ 3,922 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாதிப்பு கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளதோடு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் வடமாநில பணியாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களும் 3 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பணியிட மாறுதல் பெற்று சென்றுவிடுவதால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அதிகரித்துவிட்டது. இந்தப் பாகுபாடுகள் நிறைந்த தேர்வுமுறையினால், ஒருபக்கம் மத்திய அரசு அலுவலகங்களில், தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதோடு, மறுபக்கம் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஏராளமான காலிப்பணியிடங்களை உருவாக்குகிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும், மத்திய அரசு அலுவலகங்களின் மூலம் தமிழக மக்களுக்கு அளிக்க வேண்டிய பயனுள்ள நிர்வாகமும், இந்த பொருத்தமற்ற தேர்வு நடைமுறையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுத... அரசின் வேலைவாய்ப்புகளில் அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அரசியல்சாசனத்தின் 16-வது பிரிவில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை, பாகுபாடுகளை உடனே களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வுகளை தாய்மொழியான தமிழில் எழுத தமிழக இளைஞர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு, அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு முன்னுரிமை அளித்திடும் வகையில் இந்த போட்டித் தேர்வை, பிராந்திய மற்றும் பிரதேச அளவிலான தேர்வுகளாக ஏற்கனவே இருந்ததுபோல் நடத்திட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Comments