தமிழக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாஸ் கட்டண சலுகை திட்டம் தொடரும் போக்குவரத்துத் துறை அறிவிப்பு.

தமிழக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாஸ் கட்டண சலுகை திட்டம் தொடரும் போக்குவரத்துத் துறை அறிவிப்பு | தமிழகத்தில் கடந்த 20-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளின் கட்டணம் 60 முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்நிலையில், மாணவர்களுக்கான இலவச பாஸ் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாணவர்கள் நலன் கருதி, 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவீத இலவச பாஸ் வழங்கப்படுகிறது. மொத் தம் 22 லட்சத்து 66,483 பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகை தொடர்ந்து வழங்கப் படும். அதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் 2 லட்சத்து 13,810 பேர், அரசு பாலிடெக்னிக்கில் 35,921 பேர், அரசு ஐடிஐகளில் பயிலும் 28,348 பேருக்கும் 100 சதவீதம் இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையும் தொடரும். தனியார் கல்லூரிகளில் பயிலும் 3.21 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையுடன் கூடிய பாஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து வழங்கப்படும். மாணவர்களுக்கு பாஸ் வழங்குவதற்கு 2017-18-ம் ஆண்டுக்கு ரூ.540 கோடியே 99 லட்சத்தை போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக அரசு வழங்கியுள்ளது. இதைத் தவிர பொதுமக்களுக்கு எழும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு போக்குவரத்துக்கழகங்களில் ஏற்கெனவே இருந்த சாதாரண, விரைவுப் பேருந்துகளுடன் கூடுதலாக 498 விரைவு, சொகுசுப் பேருந்துகள் சாதாரண மற்றும் விரைவு கட்டண பேருந்துகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

Comments