பாஸ்போர்ட்டை இனி முகவரி ஆதாரமாக பயன்படுத்த முடியாது புதிய வடிவத்தில் அச்சிட்டு வழங்க நடவடிக்கை

பாஸ்போர்ட்டை இனி முகவரி ஆதாரமாக பயன்படுத்த முடியாது புதிய வடிவத்தில் அச்சிட்டு வழங்க நடவடிக்கை | பாஸ்போர்ட்டை இனி முகவரி சான்று ஆவணமாக பயன்படுத்த முடியாது. புதிய வடிவத்தில் பாஸ்போர்ட்டை அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நமது நாட்டில் இப்போது 3 நிற அட்டைகளை கொண்ட பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிற அட்டையைக் கொண்ட பாஸ்போர்ட் அளிக்கப்படுகிறது. தூதரக ரீதியில் வழங்கக்கூடிய பாஸ்போர்ட், சிவப்பு நிற அட்டையைக் கொண்டதாக இருக்கிறது. பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய பாஸ்போர்ட் நீல நிற அட்டையை பெற்றிருக்கிறது. தற்போது வழங்கப்பட்டு வருகிற பாஸ்போர்ட்டில் கடைசி பக்கத்தில் பாஸ்போர்ட்தாரரின் பெயருடன் தந்தை அல்லது பாதுகாப்பாளர் அல்லது வாழ்க்கைத்துணைவர் பெயர், முகவரி இடம் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் பாஸ்போர்ட்டில் பாஸ்போர்ட்தாரரின் தந்தையின் பெயரை நீக்கி விடலாம் என கருத்துகள் எழுந்தன. குறிப்பாக, பாஸ்போர்ட்டில் தந்தையின் பெயர் தேவை இல்லை என்று குழந்தைகளும், அவர்களின் தாய்களும் வலியுறுத்துகின்றனர். தந்தையின்றி தாயால் மட்டுமே வளர்க்கப்படுகிற குழந்தைகளும் தந்தையின் பெயரை பாஸ்போர்ட்டில் இடம்பெறச் செய்ய விரும்பவில்லை. தத்து எடுக்கப்படுகிற குழந்தைகளுக்கும் தந்தையின் பெயரை பாஸ்போர்ட்டில் சேர்ப்பதில் சிக்கல் எழுகின்றன. இது தொடர்பான கோரிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை அமைச்சகத்தின் 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, பாஸ்போர்ட்டில் பாஸ்போர்ட்தாரரின் தந்தையின் பெயரை குறிப்பிடத் தேவை இல்லை என்று சிபாரிசு செய்து அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டு விட்டது. இதையொட்டி, பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் தந்தை, பாதுகாப்பாளர் அல்லது வாழ்க்கைத்துணைவர் பெயருடன் கூடிய முகவரியை அச்சிடாமல் விட்டு விடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தை முகவரி ஆதார ஆவணமாக பயன்படுத்த முடியாது. இதுபற்றி வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறும்போது, "இனி பாஸ்போர்ட்டின் கடைசி பக்கம் அச்சிடப்படாது. அதே நேரத்தில் அதில் இடம்பெற வேண்டிய தகவல்கள், வெளியுறவுத்துறை அமைச்சக கணினியில் சேமித்து வைக்கப்படும். ஏற்கனவே வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள பாஸ்போர்ட், அதில் குறிப்பிடப்பட்டு உள்ள காலகட்டம் வரை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

Comments