ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை பொங்கலுக்குள் வழங்கப்படும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை பொங்கலுக்குள் வழங்கப்படும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கலுக்குள் ரூ.750 கோடி நிலுவை தொகை வழங்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவை தொகைகளை வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சட்டசபையில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். இந்தநிலையில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை சட்டசபையில் முதல்-அமைச்சர் நேற்று வெளியிட்டார். சட்டசபையில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. அரசு போக்குவரத்துக்கழகங்களின் நிதிப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, போக்குவரத்துக்கழகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, அதிகப்படியான நிதி வழங்கி வந்துள்ளது. கடந்த காலங்களில், அதிகரித்து வந்த செலவினத்தை ஈடு செய்வதற்கு ஏற்ப, நிரந்தர நிதி ஆதாரத்தை ஏற்படுத்தாததால், போக்குவரத்துக்கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கின. இச்சூழ்நிலையில், போக்குவரத்துக்கழகங்களின் நிதி நிலைமையை சரி செய்யும் பொருட்டு, நிதி ஆதாரத்தை ஏற்படுத்துவதற்கான உத்திகளை கடைபிடித்ததோடு, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2011 முதல் இந்நாள் வரை, டீசல் விலை ஏற்றத்திற்கான தொகை 2,848.36 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியுள்ளது. மேலும் இந்த அரசு பொது மக்களின் நலன் கருதி, போக்குவரத்து கட்டணத்தை குறைந்த அளவிலேயே பராமரித்து வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, அரசு போக்குவரத்துக்கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்திட, 5,138.57 கோடி ரூபாய் அளவிற்கு நிதி வழங்கியுள்ளது. 2017-2018-ம் ஆண்டில் மட்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க 1,397.39 கோடி ரூபாயும், தற்போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவை தொகைக்காக, 291.99 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு, போக்குவரத்துக்கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைக்காக 750 கோடி ரூபாயினை இந்த அரசு வழங்கும் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மேலும், இந்த அறிவிப்பின் மூலம் வழங்கப்படும் 750 கோடி ரூபாய் தொகையானது, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது, அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களுக்காக மட்டும், இதுவரை தமிழ்நாடு அரசு 2,147.39 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்பதையும் இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். பணிக்கு திரும்ப வேண்டும் ஆகவே, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், பொதுமக்களின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, பணிக்குத் திரும்புமாறு இந்த அவையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Comments