அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி-5’ ஏவுகணை சோதனை வெற்றி சீனா வரை சென்று தாக்கும் சக்தி கொண்டது

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் 'அக்னி-5' ஏவுகணை சோதனை வெற்றி சீனா வரை சென்று தாக்கும் சக்தி கொண்டது | அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் வாய்ந்த அக்னி-5 ஏவுகணை நேற்று ஒடிசா கடற்பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் இந்தியா தனது ஏவுகணை ஆற்றலை பெருக்குவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) மூலம் 'அக்னி' வரிசை ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அக்னி 1, 2, 3 போன்ற நடுத்தர ஏவுகணைகள் ஏற்கனவே படையில் சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும் 2,500 கி.மீ. முதல் 3,500 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த நீண்ட தூர ஏவுகணையும் தயாரிக்கப்பட்டு இருப்பதுடன், அவையும் விரைவில் படையில் சேர்க்கப்பட உள்ளன. இந்த வரிசையில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் பெற்ற அக்னி-5 ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. வடிவமைத்து தயாரித்து உள்ளது. 5 ஆயிரம் கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த இந்த ஏவுகணை ஏற்கனவே 4 முறை டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 5-வது முறையாக, பயனீட்டாளர் ஒருங்கிணைப்புடன் முதன் முறையாக நேற்று சோதிக்கப்பட்டது. ஒடிசா கடற்பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தின் 4-வது செலுத்து பகுதியில் இருந்து காலை சுமார் 9.55 மணியளவில் ஏவுகணை செலுத்தப்பட்டது. உடனே சரியான பாதையில் தனது பயணத்தை தொடங்கிய ஏவுகணை 19 நிமிடத்தில் குறிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது. இந்த சோதனையின் போது 4,900 கி.மீ. தொலைவை ஏவுகணை வெற்றிகரமாக கடந்தது. இந்த சோதனை முழுவதையும் வங்காள விரிகுடா கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பல்கள் மூலம் அதிகாரிகள் கண்காணித்தனர். 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணை சுமார் 50 டன் எடை கொண்டது. இது சுமார் 1 டன் வரை எடை கொண்ட அணு ஆயுதம் உள்ளிட்ட வெடிபொருட்களை சுமந்து சென்று துல்லியமாக தாக்கும் திறன் பெற்றதாகும். அக்னி வரிசையிலேயே அதிநவீன முறையில் செயல்படும் ஏவுகணை இதுவாகும். அக்னி-5 ஏவுகணை மூலம் சீனாவின் வடக்கு எல்லை உள்ளிட்ட பெரும்பாலான ஆசிய பகுதிகளையும், ஐரோப்பாவின் கணிசமான பகுதிகளையும் தாக்க முடியும். இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள், இதன் மூலம் இந்தியா முழுவதுமாக சுயசார்புடன் இயங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

Comments