சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தனிக்கட்சி தொடங்குவேன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தனிக்கட்சி தொடங்குவேன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு | ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய நடிகர் ரஜினி காந்த். படம்: க.ஸ்ரீபரத் நான் அரசியலுக்கு வருவது உறுதி. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்பை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவி வந்தது. அதுபற்றி எந்த உறுதியான செய்தியையும் அவர் அறிவிக்காமல் இருந்தார். கடந்த மே மாதத்தில் 15 மாவட்ட ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது 2-வது கட்டமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 6 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வந்தார். 26-ம் தேதி ரசிகர்கள் சந்திப்பை தொடங்கிவைத்து பேசிய ரஜினி, 'எனது அரசியல் நிலைப்பாடு குறித்து டிச.31-ம் தேதி அறிவிப்பேன்' என கூறியிருந்தார். இதனால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தனது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது: நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன். அதற்கு முன்பாக வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு நாட்கள் ரொம்ப குறைவாக இருப்பதால், அதில் போட்டியில்லை. நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அந்த நேரத்தில் முடிவெடுப்பேன். பெயர், புகழ், பணத்துக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. அவற்றை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் ஆயிரம் மடங்கு கொடுத்துவிட்டீர்கள். பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. 1996-ம் ஆண்டே பதவி நாற்காலி என்னைத் தேடி வந்தது. அது வேண்டாம் என்று தள்ளிவைத்தேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. இப்போது 68 வயதில் அந்த ஆசை வருமா? ஜனநாயகம் கெட்டுவிட்டது அரசியல் ரொம்ப கெட்டுவிட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுவிட்டது. கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் தமிழக மக்களை தலைகுனிய வைத்துவிட்டது. எல்லா மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கின்றனர். இந்த நேரத்திலும் நான் ஒரு முடிவெடுக்காவிட்டால், என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்கு ஜனநாயக ரீதியாக ஒரு முயற்சிகூட எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை சாகும் வரை துரத்தும். அதனால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. 'சிஸ்டத்தை' மாற்ற வேண்டும். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான சாதி, மதச்சார்பற்ற ஒரு ஆன்மிக அரசியலை கொண்டுவர வேண்டும். அதுதான் எனது நோக்கம், விருப்பம். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். அரசியல் கட்சி தொடங்கப் போவதாக ரஜினி அறிவித்தபோது, மண்டபத்திலும் வெளியிலும் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Comments