-->

Thursday, January 4, 2018

பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் அடுத்தமாதம் இறுதி செய்யப்படும் முதல்கட்டமாக 1,6,9,11 வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்படும்

பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் அடுத்தமாதம் இறுதி செய்யப்படும் முதல்கட்டமாக 1,6,9,11 வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்படும் | பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் பிப்ரவரியில் இறுதி செய்யப்பட உள்ளது. முதல் கட்டமாக, வரும் கல்வி ஆண்டில் 1,6,9,11-ம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் புதிய பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றனர். இந்த குழு, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களை மட்டுமல்லாமல் அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளின் பள்ளி பாடத்திட்டங்களையும் ஆய்வு செய்தது. மேலும், பொதுக்கூட்டம் நடத்தி பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தது. இதைத் தொடர்ந்து, புதிய பாடத்திட்டக் குழு, ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான வரைவு பாடத்திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறியும் வகையில் வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் மூலமாகவும், தபால் வழியாகவும் தங்கள் கருத்துகளை அனுப்பினர். அனைத்து கருத்துகளும் முறையாக தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத்திட்டத்தை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் பிப்ரவரியில் இப்பணி முடிவடையும் என்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரும், புதிய பாடத்திட்டக் குழுவின் உறுப்பினர்-செயலருமான ஜி.அறிவொளி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, புதிய பாடத்திட்டம் அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவரப்படும். வரும் கல்வி ஆண்டில் அதாவது 2018-19-ம் ஆண்டு 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கும், அதைத்தொடர்ந்து 2019-20-ல் 2,7,10,12 ஆகிய வகுப்புகளுக்கும், 2020-21-ல் 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும். பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டதும் பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொள்ளும். இந்த நிலையில், வரைவு பாடத்திட்டத்தை இறுதி செய்யும் பணி மற்றும் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தொடர்பாக பள்ளிக்கல்வித் துறையின் செயலர் த.உதயச்சந்திரன், பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தார். புதிய பாடத்திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளும் உதயச்சந்திரனின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.