பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12.01.2018) விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு | பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (வெள்ளிக் கிழமை) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழர் திருநாளாம், பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி, (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு, வருகிற 13-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை (சனிக் கிழமை முதல் செவ்வாய்க் கிழமை வரை) 4 நாட்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களுடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன், சிறப்பாக கொண்டாடும் விதமாக, நாளை (வெள்ளிக் கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் கொண்டாடும் பொருட்டும், குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்கள் அவர்களது இள வயது முதற்கொண்டே தமிழர் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக் காக்கும் பொருட்டும், அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றத்தோடு இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக, வருகின்ற 12-ந் தேதி (நாளை) விடுமுறை அளித்து, அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல தமிழக உயர் கல்வித் துறை தனியாக ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது, அதில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவச் செல்வங்கள், இளம் வயது முதலே நம் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக்காக்கும் பொருட்டு, வெகு சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, அனைத்து கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகத்துக்கும், பல்கலைக்கழகங்களின் உறுப்பு கல்லூரிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக நாளை(வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Comments