பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு முடிவு ரத்து தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் வெளியீடு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு முடிவு ரத்து தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் வெளியீடு | பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வு முடிவு ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. மேலும், தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், விரிவுரையாளர் பணியில் காலியாக உள்ள 1,058 இடங்களுக்கு ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது. இந்த தேர்வை 1 லட்சத்து 33 ஆயிரத்து 567 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் கடந்த(நவம்பர்) மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவில் பல்வேறு குறைகள், முரண்பாடுகள் இருப்பதாக தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனுக்கள் அனுப்பினர். அதன் அடிப்படையில், கடந்த மாதம் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், அனைத்து தேர்வர்களின் விடைத்தாள்களும் 'ஸ்கேன்' செய்யப்பட்டு www.trb.tn.nic என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் வருகிற 18-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த பின்னரே திருத்திய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி, தேர்வு எழுதியவர்கள் கூறுகையில், தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்துள்ளது. உதாரணமாக ஏற்கனவே 140 மதிப்பெண் எடுத்தவர்கள் தற்போது 60 மதிப்பெண் எடுத்துள்ளனர். இவ்வாறு பலருக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தாலும், கூடினாலும் கருத்து தெரிவித்ததின் அடிப்படையில் 2 அல்லது 4 மதிப்பெண் தான் வித்தியாசமாக இருக்கும். இதில், ஏதோ குழப்பம் நடந்துள்ளது. எனவே இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை நடத்தவேண்டும் என்றனர்.

Comments