ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை வழக்கம்போல் நடைபெறும் சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை வழக்கம்போல் நடைபெறும் சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு | ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால் 2018-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வழக்கம்போல் ஜல்லிக்கட்டு நடைபெறும். கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு கடந்த ஜனவரி 21-ந் தேதி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்ததால் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் நிரந்தர சட்ட மசோதாவுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி 'பீட்டா' அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜனவரி மாத இறுதியில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. அப்போது பீட்டாவின் மனு மீது 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் நேற்று இதே அமர்வில் மீண்டும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடந்தது. அப்போது பீட்டா உள்ளிட்ட அமைப்புக்கள் சார்பில் சித்தார்த் லூத்ரா, ஆனந்த் குரோவர், கிரி ஆகியோர் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்துக்கு எதிராக வாதிட்டனர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதிடுகையில், "சட்டங்களை இயற்றுவதற்கு மத்திய அரசுக்கு எப்படி அதிகாரம் உண்டோ அதேபோல மாநில அரசுக்கும் தங்களுக்கு தேவையான சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு. மேலும் கலாசார பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவதற்காக தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பாரம்பரிய ஜல்லிக்கட்டை பாதுகாக்க அரசியல் சாசன பிரிவு 29(1)ல் பாதுகாப்பு உள்ளது. மிருகவதை சட்டத்துக்கு எந்த வகையிலும் இந்த சட்டம் எதிரானது அல்ல" என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறும்போது, "அரசியல் சாசன பிரிவு 29(1)ல் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் அல்லது ஒரு பிரிவினர் தங்களது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்க வழிவகை செய்துள்ளது. இது தமிழ்நாட்டு மக்கள் முழுமைக்கும் இது பொருந்துமா? மிருகவதை தடை சட்டத்தின் நோக்கம் விலங்குகளுக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது என்பதுதான். தமிழக அரசின் சட்டம் மிருகவதை தடை சட்டத்தை மீறுவதாக உள்ளதா இல்லையா? ஆகிய அம்சங்கள் இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டி உள்ளது. அதற்காக வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுதான் இவற்றை விசாரிக்க முடியும்" என்று தெரிவித்து மனுக்களின் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தனர். மேலும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்தனர். சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் எழுப்பியுள்ள கேள்விகள் மற்றும் அரசியல் சாசன அமர்வு கருத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தீர்ப்பு வெளியிட கணிசமான நேரம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து இருப்பதால் 2018-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வழக்கம்போல் ஜல்லிக்கட்டு நடத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments