வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்க மார்ச் 31-ந் தேதிவரை கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு

வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்க மார்ச் 31-ந் தேதிவரை கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு | வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடுத்து அவை விசாரணையில் உள்ளன. அதே நேரத்தில், வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31-ந் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட பண பரிமாற்றத்துக்கும் ஆதார் எண் தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் ஆதார் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசு, பல்வேறு சேவைகளுக்கும், நலத்திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31-ந் தேதிவரை நீட்டிக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்து மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகம் டுவிட்டரில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளது. இதன்படி, 6 மாதங்களுக்கு மேலாக வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் மார்ச் 31-ந் தேதிக்குள் இணைத்து விட வேண்டும். அக்டோபர் 1-ந் தேதிக்கு பின்னர் வங்கிக்கணக்கு தொடங்கியவர்கள், வங்கிக்கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் ஆதார் எண், பான் எண் இணைத்து விட வேண்டும்.

Comments