-->

Sunday, December 31, 2017

2018 ஏப்ரல் மாதத்தில் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் ஆய்வறிக்கையில் தகவல்

2018 ஏப்ரல் மாதத்தில் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் ஆய்வறிக்கையில் தகவல் | 2018 ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கான குறுகிய கடன் வட்டி விகிதங்களை பாரத ரிசர்வ் வங்கி குறைக்கும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ ரேட் பாரத ரிசர்வ் வங்கி இம்மாதம் 6-ந் தேதி அன்று கடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை அறிவித்தது. அப்போது இவ்வங்கி குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. எனவே, ரெப்போ ரேட் எந்த மாற்றமும் இன்றி 6 சதவீதமாக நீடிக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ ரேட்டும் மாறாமல் 5.75 சதவீதமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்க நிலவரங்கள்தான் நிர்ணயம் செய்கின்றன. நவம்பர் மாதத்தில் சில்லரை விற்பனை விலை பணவீக்கம் 4.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 15 மாதங்களில் இல்லாத ஏற்றமாகும். அம்மாதத்தில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 3.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி, நீண்ட கால அடிப்படையில் சில்லரை விலை பணவீக்கத்தை 4 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது. நவம்பர் மாதத்தில் இது 4.88 சதவீதமாக உயர்ந்து இருப்பதால் இவ்வங்கி வட்டி விகிதங்களை குறைக்குமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் (2017-18) மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் 4.3 முதல் 4.7 சதவீதம் வரை இப்பணவீக்கம் இருக்கும் என இவ்வங்கி தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில், சர்வதேச நிதிச்சேவை நிறுவனமான பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வங்கி வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருக்கிறது. நடப்பு டிசம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.2 சதவீதமாக உயரும் என்றும், அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டில் இது 4.5 சதவீதமாக குறையும் என்றும் இந்நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. ஆய்வுக்கூட்டம் பாரத ரிசர்வ் வங்கி தனது கொள்கை முடிவுகளை தீர்மானிக்க சில்லரை விற்பனை விலை பணவீக்கத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதனால் பணவீக்கத்தை துல்லியமாக அளவிட முடியும் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆய்வுக்கூட்டம் பிப்ரவரி 6, 7 தேதிகளில் நடைபெற உள்ளது. வட்டி விகிதங்கள் பற்றிய அறிவிப்பு அம்மாதம் 7-ந் தேதி (புதன்கிழமை) வெளிவரும்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.