-->

Sunday, December 31, 2017

தமிழ் வழியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது

தமிழ் வழியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் சென்னை, டிச.28- தமிழ் வழியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 960 பேர்களுக்கு 'பெருந்தலைவர் காமராஜர் விருது' வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தலைமை செயலகத்தில் பேட்டி அளித்த போது கூறியதாவது:- பெருந்தலைவர் காமராஜர் விருது தமிழ் வழியில் படித்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவ-மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்தநாளில் வழங்கப்பட உள்ளது. 10-ம் வகுப்பில் 15 மாணவர்கள், பிளஸ்-2 வகுப்பில் 15 மாணவ-மாணவிகளை தேர்ந்து எடுத்து 32 மாவட்டங்களை சேர்ந்த 960 பேர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருது பெறும் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரமும், பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடியே 45 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு அறிவித்து இருப்பது தமிழகத்தில் இதுதான் முதல் தடவை. தேர்வு செய்யும் முறை என்னவென்றால் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு 40 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அந்த செயல்பாடுகள் வருமாறு:- சான்றிதழ் * நடிப்பு, கிராமிய நடனம், இசைக்கருவிகளை வாசித்தல், கவிதை, கட்டுரை, கதை சொல்லுதல், பேச்சாற்றல், வினாடி-வினா, பரதநாட்டியம், ஓவியம் வரைதல் போன்ற கலை இலக்கிய திறன்களில் குறிப்பிடத்தக்க பரிசு பெற்றவர்களாக இருக்கவேண்டும். * விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாவட்ட, மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் (ஏதேனும் ஒன்றில்) வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். * அறிவியல் மன்றம், அறிவியல் கண்காட்சி, மற்றும் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் போன்ற இதர அறிவியல் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கேற்று தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பரிசு பெற்றவர்களாக இருக்கவேண்டும். * சாரண-சாரணியர், சுற்றுச்சூழல் மன்றம், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை, இளம் செஞ்சிலுவை சங்கம், சாலை பாதுகாப்பு குழு ஆகியவற்றில் ஏதாவது இடம் பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட செயல்பாடுகளில் திறன் பெற்றவர்களுக்கு 40 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். 100 மாணவர்கள் தேர்வு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அந்த திட்டத்தின்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 100 மாணவர்கள் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள். அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் போன்ற 4 பாடப்பிரிவுகளில் இருந்து தலா 25 மாணவர்கள் என மொத்தம் 100 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணமாக அழைத்து செல்லப்படுவார்கள். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 100 மாணவர்கள் ஜப்பான், சீனா, தென் கொரியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, எகிப்து, பிரான்ஸ், ரஷியா, சுவீடன் போன்ற பல வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவர்கள் அந்த நாடுகளின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து வருவார்கள். 286 பாடப்பிரிவுகள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்கும் வகையில் 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங், வேளாண்மை மற்றும் கலை அறிவியல் ஆகிய துறைகளை மட்டுமே தேர்வு செய்வார்கள். ஆனால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்கள் வருங்காலத்தில் என்ன பாடத்தை எடுத்து படிக்கலாம்? என்று அறிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை பெரிய அளவில் பெயர்பலகைகளில் வைக்கப்படும். பிளஸ்-2 மாணவர்களுக்கு 412 இடங்களில் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முதலில் 100 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அந்த மையங்களில் பயிற்சி பெறுவதற்கு 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் 'ஆன்-லைனில்' விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து 'லேப்-டாப்' வழங்கப்படும். 'வெயிட்டேஜ்' முறை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக 'வெயிட்டேஜ்' முறை என்பது 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அதில் ஏதோ ஒரு குறைபாடு இருந்து வருகிறது. இதுகுறித்து நானும், துறை செயலாளரும் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம். அதன்பிறகு அதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம்? என்பது குறித்து கூறுவோம். இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பிலும் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். அதன்மீதும் நிச்சயம் பரிசீலனை செய்யப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் சிறிய அளவில் குறைபாடு நிகழ்ந்திருக்கிறது. மற்றபடி பெரிய அளவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தவறு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறைபாடு குறித்து 'எல்காட்' நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உடன் இருந்தார்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.