தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்த அரசு மருத்துவர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து வழக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்த அரசு மருத்துவர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து வழக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு | தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்த அரசு மருத்துவர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களாக தேர்வு செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளில் பணியில் இருந்து வரும் டாக்டர் சுதாகர் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- நாங்கள் பணியில் இருந்து கொண்டே நுழைவுத்தேர்வு எழுதி முதுகலை மருத்துவ படிப்பு படித்து வருகிறோம். வருகிற மே மாதம் படிப்பு நிறைவடைகிறது. எங்களுக்கு மருத்துவக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் மூத்த நிலைய மருத்துவ அதிகாரியாகவோ அல்லது உதவி பேராசிரியராக பணியாற்ற அனைத்து தகுதியும் உள்ளது. இந்தநிலையில் மருத்துவ தேர்வு வாரியம், தற்காலிக அடிப்படையில் பணியாற்ற நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 550 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களை(சிறப்பு பிரிவு) உதவி பேராசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேர்ந்த நாங்கள், தற்போது பணிபுரிந்து கொண்டே முதுகலை மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகிறோம். எங்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்காமல், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 550 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களை(சிறப்பு பிரிவு) உதவி பேராசிரியர்களாக நியமிப்பதன் மூலம் எங்களது வாய்ப்பு மறுக்கப்படுகிறது. உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்(சிறப்பு பிரிவு) என்ற பதவி மாநில விதிகளிலோ அல்லது இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளிலோ இல்லை. சிறப்பு பிரிவில் பணியாற்ற நியமிக்கப்பட்ட உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களை மருத்துவக்கல்லூரிகளில் நேரடியாக உதவி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது. இதுபோன்று நியமிப்பது பணி எனவே, முதுகலை மருத்துவ படிப்பை முடித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு மருத்துவர்களாக பணியாற்றி தற்போது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் எங்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களை(சிறப்பு பிரிவு) எப்படி நேரடியாக உதவி பேராசிரியர்களாக நியமிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதன்பின்பு, இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், மருத்துவ தேர்வு வாரியம் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 4-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Comments