இந்திய அழகி மனுஷி சில்லர் உலக அழகியாக தேர்வு

சீனாவில் நடந்த போட்டியில் இந்திய அழகி மனுஷி சில்லர் உலக அழகியாக தேர்வு 20 வயது மருத்துவ மாணவி. 67-வது உலக அழகி போட்டி (மிஸ் வேர்ல்ட்) சீனாவின் சான்யா நகரில் நடந்தது. இதில் வெற்றி பெற்றார் இந்திய அழகி மனுஷி சில்லர். சீனாவில் நடந்த போட்டியில் உலக அழகியாக இந்திய அழகி மனுஷி சில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மருத்துவ மாணவி ஆவார். 'மிஸ் வேர்ல்ட்' என்னும் உலக அழகி போட்டி சீனாவில் சான்யா சிட்டியில் நேற்று நடந்தது. இதில் 108 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 20 வயதான இந்திய அழகி மனுஷி சில்லர், உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டின் உலக அழகி ஸ்டீபனி டெல் வேல்லி கிரீடம் சூட்டினார். உலக அழகி ஆக வேண்டும் என்பது மனுஷி சில்லரின் இளம் வயது கனவாம். கடைசியாக 2000-ம் ஆண்டில் இந்தியாவின் சார்பில் பிரியங்கா சோப்ரா, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 17 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மனுஷி சில்லர் உலக அழகி ஆகி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை டாக்டர் மித்ரா பாசு சில்லர், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானி. தாயார் டாக்டர் நீலம் சில்லர், மனித நடத்தை மற்றும் சார்பு அறிவியல் கல்வி நிறுவனத்தில் இணை பேராசிரியை. மனுஷி சில்லர், டெல்லி செயிண்ட் தாமஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை படித்தார். சோனிப்பட் பகத் பூல் சிங் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். குச்சுப்புடி நடன கலைஞர். தேசிய நாடக பள்ளியிலும் படித்திருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி நடந்த 'பெமினா மிஸ் இந்தியா' அழகி போட்டியில் கலந்து கொண்டு இந்திய அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். இப்போது உலக அழகியாக தேர்வு பெற்று, தன் இளம் வயது கனவை நனவாக்கி உள்ளார்.

Comments