புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் அறிவித்தனர் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்தனர். நீதிமன்ற தலையீட்டால் போராட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த அக்டோபர் மாதம், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. இந்தப் பரிந்துரை அடிப்படையில் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அது தொடர்பான எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்தக் கூட்டத்தில், 21 மாத நிலுவைத் தொகையை தர வேண்டும். நீதிபதியை விமர்சித்ததாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.24-ம் தேதி தாலுகாதோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், வரும் 22-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடக்கும் வழக்கு விசாரணை முடிவு அடிப்படையில், அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதேபோல் ஜாக்டோ -ஜியோ கிரெப் சார்பில் நடந்த மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில், நவ.18-ம் தேதி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்துவது என்றும், டிசம்பர் 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை விளக்க கூட்டம், டிச.7-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அடையாள உண்ணாவிரதம், ஜனவரி 6-ம் தேதி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Comments