நீட் தேர்வுக்கு இம்மாத இறுதியில் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

நீட் தேர்வுக்கு இம்மாத இறுதியில் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு | 'நீட்' தேர்வுக்கு இம்மாத இறுதிக்குள் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 'நீட்' தேர்வை எதிர்த்து முன்பு தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், பல கேள்விகளை கேட்டு அதற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு கள், நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக மாணவர்களை 'நீட்' உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளில் அச்ச உணர்வு இல்லாமல் பங்கேற்கும் வகையில், திறமையான ஆசிரியர்களை கொண்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் வட்டார அளவில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். மேலும் ரூ.72 லட்சம் செலவில் அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும் 'நீட்' உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக பிரத்யேக பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். தமிழக மாணவர்களுக்கு உளவியல் ரீதியாகவும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 104 இலவச சேவை மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் திறமையாக செயல்படுகிறது. இதில், தொடர்பு கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் தற்கொலை எண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த மையங்கள் தொடர்பாக போதுமான அளவில் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. 'நீட்' தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மொத்தம் 1,422 போராட்டங்கள் நடந்துள்ளன. அதில் 933 போராட்டங்களை அரசியல் கட்சியினரும், 317 போராட்டங்களை மாணவர்கள் இயக்கங்களும் நடத்தியுள்ளன. தமிழகத்தில் அரசு, தனியார் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களையும் தகுதியான மாணவர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. தற்போது ஆங்கிலத்தில் உள்ள 'நீட்' தேர்வு தொடர்பான வினா-விடை தொகுப்பை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை 8-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Comments